26 Jul 2016

கல்முனை நகரில் பொது வாகன தரிப்பிடம் அவசியம்-பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

SHARE
(டிலா)

கல்முனை நகரில் பொது வாகன தரிப்பிடம் அவசியம் என கல்முனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஏ. டப்ளியு.ஏ.ஹப்பார் தெரிவித்தார்.

கல்முனை நகரில் வாகனம் செலுத்துவோரும் மோட்டார் வாகனப் பொலிஸாரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயும் ஒன்றுகூடல் கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் (25.07.2016) நடைபெற்றது. இங்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு தெரிவிக்கையில்;

கல்முனை நகரில் பொதுவான வாகன தரிப்பிடம் இல்லாமையால் இன்று பல தரப்பினரும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தனியார் வாகனங்கள் செலுத்துவோர் நகரிலுள்ள பிரதானவீதி, வியாபாரநிலையங்கள், அரச திணைக்களங்களுக்கு முன்னால் முறையற்ற விதத்தில் வாகனங்களை தரித்து வைப்பதால் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக நாம் சட்ட ஒழுங்கு அறிவித்தல் பதாகைகளை அமைக்கவுள்ளோம். அதன் பின்னர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.

தனியார் வாகனங்களும் - இலங்கை போக்குவரத்து அதிகாரசபைக்கு சொந்தமான வாகனங்களும் சில பிரதேசங்களுக்கு இணைந்த சேவையின் அடிப்படையில் போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் நேரமுகாமைத்துவத்தின் அடிப்படையில் ஏன் இ.போ.ச. பஸ் தரிப்பிடத்தில் தனியார் பஸ் வண்டிகளை நிறுத்த முடியாது? என கேள்வி எழுப்பினார். இதற்கு சரியான தீர்வு எட்டப்பட வேண்டும் என்றார்.

இங்கு உரையாற்றிய கல்முனை மாநகர ஆணையாளர் ஜெ.லியாக்கத் அலி; கல்முனை நகரில் 5மில்லியன் ரூபா நிதியில் வாகன தரிப்பிடம் நிர்மாணிக்கப்படுவதற்கான பூர்வாங்க வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் இது போதாது எதிர்காலத்தில் நகருக்குள் வருகின்ற வாகனங்களை தரித்து வைக்கக்கூடிய பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பதற்குரிய ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இது நடைமுறைக்கு வரும்போது நிறையப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

இந்த கூட்டத்தில் சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து பொலிஸார், இ.போ.ச. அதிகாரிகள், தனியார் வாகன உரிமையாள்கள், வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சங்க பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: