26 Jun 2016

நீரில் மூழ்கிய இளைஞர் உயிர்துறந்த இடத்தில் துளிர்விட்ட மெய்சிலிர்க்க வைக்கும் இன மத பேதங்களைக் கடந்த மனிதாபிமானம்

SHARE
இயற்கை மற்றும் மனித நடத்தைகளினூடாகவரும் இடர்கள், விபத்துக்கள், அசம்பாவிதங்கள், தற்செயல் நிகழ்வுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுவது இயல்பு. ஒரு போது இவற்றை விதி என்கின்ற வரையறைக்குள் கொண்டு வந்து சமாதானப்பட்டு தேற்றிக் கொள்ள முடிகின்றது.
ஆனால், இவ்வாறான வேளைகளில் பல மனிதாபிமான செயற்பாடுகள் இடம்பெற்று விடுகின்றன. அது நமக்கு படிப்பனைக்குரியதாகவும் உள்ளது.
அவ்வாறான இன மத பேதங்களைக் கடந்த உண்மையும் உயிரோட்டமுமான  மெய்சிலிர்க்க வைக்கும் மனிதாபிமான நிகழ்வு சனிக்கிழமையன்று (ஜுன் 25, 2016) மட்டக்களப்பு உன்னிச்சையில் இடம்பெற்றதை தன்னால் மறக்க முடியாதிருப்பதாக கூறுகின்றார் ஏறாவூர் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் லோகிதராஜா தீபாகரன்.

அன்றைய தினம் மட்டக்களப்பு ஓட்டமாவடி மீராவோடையைச் சேர்ந்த நண்பர்கள் நான்கு பேர் வெளிநாடு செல்ல உத்தேசித்திருக்கும் தங்களது நண்பருடன் கடைசியாக குளத்தில் குளித்து விட்டு வருவதற்காக மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்குச் சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கே நீர் விநியோகம் செய்யும் இந்தப் பாரிய குளத்தைப் பார்வையிடுவதற்காகவும், நீராடுவதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் பல்வேறுபட்ட ஊர்களிலிருந்தும் குடும்பம், நண்பர்கள், மற்றும் தனிப்பட்டவர்களும் செல்வது வழமை.

சனிக்கிழமையும் அவ்வாறே அந்தக் குளத்திற்கு பலர் வந்திருந்தார்கள். ஆனால், தற்போது றமழான் நோன்பு காலம் என்பதால், இந்த நான்கு முஸ்லிம் இளைஞர்களைத் தவிர வேறு முஸ்லிம்கள் அங்கு சென்றிருக்கவில்லை.
குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்படும் பின்பகுதியில் தேங்கியிருக்கும் நீரில் இந்த நான்கு முஸ்லிம் இளைஞர்களும் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மீறாவோடை மீரானியா வீதியைச் சேர்ந்த நுபீர் முஹம்மத் றிபாஸ் (வயது 22) என்ற இளைஞன் அங்கு சகதிக்குள் மூழ்கிவிட்டான். அவ்வேளையில் மூழ்கிய தமது நண்பனை நீரில் இருந்து மீட்க முயற்சி செய்து தோல்வியடைந்த நிலையில் ஏனைய மூவரும் தமது நண்பனைக் காப்பாற்றுமாறு அவலக் குரல் எழுப்பியுள்ளனர்.

இதனை அவதானித்த அங்கிருந்த தமிழ் சகோதரர்கள் உதவிக்கு விரைந்தனர்.
அவர்களில் தீபாகரனும் ஒருவர், சம்பவம் பற்றி தீபாகரன் இவ்வாறு விவரித்தார்@ “அந்த இளைஞன் மூழ்கியிருந்த பகுதி எமக்குக் காட்டப்பட்டதும் நான் சுழியோடிகள் யாராவது இருந்தால் ஓடி வாருங்கள் என்று கூக்குரலிட்டேன். எனக்கு ஓரளவுதான் சுழியோடத் தெரியும், அப்போது எனக்கு முன் பின் அறிமுகமில்லாத மட்டக்களப்பு-வீச்சுக்கல்முனையைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞன் உதவிக்கு விரைந்து வந்தான்.

உடனே கயிற்றைக் கட்டிக் கொண்டு அந்த நீர்ப்பகுதிக்குள் இறங்கத் தீர்மானித்தோம். ஆனால், அந்த சுழி நீர்ப் பகுதிக்குள் இறங்க கயிறு தேவைப்பட்டது, அங்கு கயிறு இருந்திருக்கவில்லை.

இதனை அவதானித்துக் கொண்டிருந்த அங்கிருந்த தமிழ்ப் பெண்களும் யுவதிகளும் சேலைகளையும், தாம் அணிந்திருந்த சல்வார் முந்தானைத் துணிகளையும் (ஷோல் ளூயறட) எந்தவித தயக்கமும் இல்லாமல் களைந்து கயிறாகக் கட்டித்தந்ததோடு அங்கிருந்த தமிழ்ப் பெண்களும் யுவதிகளும் இளைஞனின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்று அழுது புலம்பியவாறு பிரார்த்தனையில் ஈடுபட்ட மனிதாபிமான உணர்வு மெய்சிலிர்க்கவும் கண்கலங்கவும் வைத்தது.

கயிறாகத் தொடுக்கப்பட்ட சேலை மற்றும் முந்தானைத் துணிகளைக் கொண்டு நாங்கள் குளத்தில் இறங்கித் தேட கரையிலிருந்த பெண்களும் யுவதிகளும் அந்த சேலைக் கயிற்றைக் கரையிலிருந்தவாறு பிடித்துக் கொண்டு நின்றனர்.
மூழ்கிய இளைஞனைக் கண்டு பிடித்து கட்டியிழுத்து கரைசேர்த்து முதலுதவியளித்தோம். பின்னர் படையினரும் உதவிக்கு வந்து சேர்ந்தார்கள். உடனடியாக அருகிலுள்ள கரடியனாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தோம். எனினும், அங்கு இளைஞனின் உயிர் பிரிந்து விட்டது. எனினும், அந்த கடைசி நிகழ்வு என் கண்முன்னே நிழலாடுகிறது.

இளைஞனின் மரணம் இயற்கை என்றாலும், கடந்த கால கசப்புணர்வுகளால் தூரப்பட்டுப் போயிருக்கின்ற சமூகங்களுக்கிடையிலான இன ஐக்கியத்திற்கு அந்த இடத்தில் துளிர்த்த மனிதாபிமான உணர்வு எல்லைகளற்றது.
அது இனங்களையும் மதங்களையும் கடந்து புனிமாகப் பிரவாகம் எடுப்பது. இந்த மனிதாபிமான உணர்வு எல்லா இடங்களிலும் தளைத்தோங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மரண வீட்டுக்கும் தான் செல்ல இருப்பதாக தீபாகரன் கூறினார். தன்னோடு உதவிக்கு வந்து நீரில் மூழ்கிய இளைஞனைக் காப்பாற்ற வேண்டும் என்று உடடியாகச் செயற்பட்ட தனக்கு முன்பின் தெரியாத மட்டக்களப்பு- வீச்சுக்கல்முனையைச் சேர்ந்த இளைஞனின் தியாகத்தையும் தீபாகரன் பாராட்டினார்.

அதேவேளை, இந்த உன்னிச்சைக் குளப்பகுதியைப் பார்க்கவும், நீராடவும், பொழுது போக்கவும் வரும் நூற்றுக் கணக்கானோருக்கு அங்கு எந்தவிதமான பாதுகாப்பு எச்சரிக்கைகளோ, உயிர்காப்பு நடவடிக்கைகளோ முதலுதவி வசதிகளோ இல்லாமலிருப்பது கவலைக்குரியது என்று தீபாகரன் சுட்டிக் காட்டினார்.

மரணித்த இளைஞனுடைய பெற்றோர் இருவரும் கட்டார் நாட்டில் தொழில் புரிகின்றனர்.

அந்த இளைஞன் கடந்த 10ஆம் திகதி மக்கா சென்று முஸ்லிம்களின் மார்க்கக் கடமையான உம்றாவை முடித்து விட்டு நாடு திரும்பியிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: