3 May 2016

வட மாகாண நீர் வழங்கல் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

SHARE
(ஜெம்சாத் இக்பால்)

யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைக்கு விவசாயிகளை பாதிக்காத விதத்தில் உரிய தீர்வை காண்பதற்கு இரணைமடுக் குளத்தின் இணைக்கட்டை உயர்த்தி அதன் நீரை
பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஏனைய மாற்றுவழிவகைகளைக் கையாளுதல் என்பன குறித்து சம்பந்தப்பட்ட ஏனைய அமைச்சர்களுடனும், ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பொது மக்களுக்கு போதிய தெளிவை ஏற்படுத்திய பின்னர் இறுதி முடிவு காணப்படுமென அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

வட மாகாண நீர் வழங்கல் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் திங்கள்கிழமை (02) நடைபெற்றபோது அதற்கு தலைமை வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர்களான சதர்ஷணி பெர்னாண்டோபுள்ளே, விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சரவணபவன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாண சபை அமைச்சர்களும், உறுப்பினர்களும், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களும், வட மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளும்,  அமைச்சினதும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழிமுறையாக கடல் நீரின் உவர்ப்புத் தன்மையை சுத்திகரித்து வழங்குவதற்கான உத்தேசத்திட்டத்தை அமுல்ப்படுத்துவதா என்பது பற்றியும் மேலும் மாற்று வழியாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 6 குளங்களை புனரமைத்து அவற்றிலிருந்து மேலதிக நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துவதா என்பது பற்றியும் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அமைச்சர் ஹக்கீம் வட மாகாண மக்களின் குடிநீர் பிரச்சினை பற்றி தமது வழிகாட்டலில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையும் மேற்கொள்ளும் செயல்திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார். அத்துடன், இரணைமடு விவகாரம் உட்பட நீர் தொடர்பான பிரச்சினை அரசியல் மயப்படுத்தப்பட்டு வருவதால் இதனை மிகவும் கவனமாக கையாள வேண்டியிருப்பதர்கவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

அதைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாண சபை உறுப்பினர்களும் மக்களின் குடிநீர் பற்றாக்குறையின் விளைவுகள் பற்றியும், சுத்தமான நீர் கிடைக்காமையாளும், கழிவு நீர் மற்றும் மலம் என்பன நீரோடு கலப்பதால் ஏற்படும் நோய்கள் மற்றும் உடல்நலக் கேடுகள் பற்றியும் காரசாரமாக கருத்துக்களை முன் வைத்தனர்.

இவ்வாறான மாவட்டங்களில் நீரினால் ஏற்படும் இனங்காணப்படாத சிறுநீரக நோய்களின் அபாயம் பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது.

இந்நிகழ்வில் உடல் நலக்குறைவு காரணமாக தம்மால் பங்குபற்ற இயலாதிருப்பதாக காலையில் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்தபோது வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் தம்மிடம் கவலை தெரிவித்ததாகவும் எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொள்ள இயலாமை குறித்து அறிவித்திருந்ததாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை குறித்து பிறிதொரு தினத்தில் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான கலந்துரையாடலொன்றை நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது.  




SHARE

Author: verified_user

0 Comments: