27 Apr 2016

மண்முனை தென்மேற்கு அபிவிருத்திக்குழுக் கூட்டம்!

SHARE
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குள் 10- 12 வரையான வட்டி வீதத்திற்குள்ளே மக்களுக்கு நிறுவனங்கள் கடன்களை வழங்க வேண்டும் என்பதுடன் அதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர் மேற்கொள்ள வேண்டும் என்றும்  பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று(25) திங்கட்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் ஏற்பாட்டில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற போதே பிரதி அமைச்சர் இந்தக்கருத்தினை வெளியிட்டார். 
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் நுண்கடன் பல்வேறு நிறுவனங்களினால் அதிக வட்டி வீதத்திற்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால் மக்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறான வட்டி வீதத்தில் நுண்கடன்களை வழங்குவதை தடுக்க வேண்டும். குறிப்பாக பிரதேசத்திற்குள் 10 தொடக்கம் 12 வரையான வட்டி வீதத்திற்குள்ளே மக்களுக்கு நிறுவனங்கள் கடன்களை வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர் மேற்கொள்ள வேண்டும் என இணைப்புக்குழு இணைத்தலைவர் பிரதி அமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டதுடன் இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கூறினார்.

இன்று கைத்தொலைபேசி ஊடாக கடன் வழங்கும் திட்டம் வந்துள்ள நிலையில் சமூர்த்தி மூலமாக மிகக்குறைந்த வட்டி வீத  தொகையில் வழங்கப்படும்  நுண்கடன்களை இலகுபடுத்தலை மேற்கொண்டு மக்களுக்கு வழங்க வேண்டும். ஆனாலும் இதனது இலகுப்படுத்தல் தன்மை இல்லாமையினாலும் அதிக கூடிய வட்டிக்கு மக்கள் கடனை பெற்றுக்  கொள்ளுகின்றனர் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் நுண்கடன் பற்றி குறிப்பிடுகையில், மக்களது பணங்களே சமூர்த்தியில் இருக்கின்றது. இப்பணத்தினை மக்களுக்கு கடனாக வழங்குவதில் அதிகாரிகள் அதிக அக்கறை செலுத்துவதுடன் இக்கடனை பெற்றுக்கொள்ளுவதற்கு மக்களுக்கு ஏற்ற வகையில் இலகுபடுத்த வேண்டும். சமூர்த்தி வங்கிகள் ஊடாக வழங்கப்படும் கடன் வட்டி வீதம் மிகுக் குறைந்தளவில் இருக்கின்றது. குறிப்பாக 4 வீதத்திற்கு வழங்கப்படுகின்றது. இதனை மக்கள் சரியாக பெற்றுக்கொண்டு பயன் பெறுவதற்கு ஏற்றவகையில் வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்திற்காக 26.5மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 1,495,000 ம் பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்  ஞா.சிறிநேசன்  680,000 ரூபாவும், பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் 300,000 ரூபாயும், இராஜாங்க அமைச்சர் எம்.எல்ஏ.எம் ஹிஸ்புல்லாஜ் 315,000 ரூபாயும், சீ.யோகேஸ்வரன் 200,000 ரூபாய் தங்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்தும் ஒதுக்கியுள்ளனர்.

மேலும் கிராமராச்சியம் வேலைத்திட்டத்தின் கீழ் 24 கிராம சேவையாளர் பிரிவிலும் 24 மில்லியன் ரூபாய்க்கான வேலைத்திட்டமும் முன்னனெடுக்கப்படவுள்ளது. அத்துடன் விளையாட்டு அமைச்சினால் கொக்கட்டிச்சோலை விளையாட்டு மைதானம் புனரமைப்புக்கு 1 மில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: