1 Sept 2015

டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை

SHARE
எதிர்வரும் காலங்களில் டெங்கு நோய்த் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கத்தினால் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எதிர்காலத்தில் டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறை தொடர்பாக கிராம சேவையாளர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை அட்டாளைச்சேனை சுகாதார வைத்திகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களுக்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவது ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரினதும் கடமையாகும்.

அந்த வகையில், எமது பிரதேசத்தில் ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய கிராமங்கள் டெங்கு ஒழிப்பு வலயமாக பிரிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் முதல் விசேட வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றார்.

 மேலும்.மழை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் எமது பிரதேசத்தில் டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்கு உங்களது ஒத்துழைப்பும் ஆலோசணைகளும் இன்றியமையாததாக காணப்படுகின்றது. நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், அவற்றின் வதிவிடத்தை முற்று முழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது.
 பூச்சிகொல்லி மருந்துகளால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப்படுத்தும் முறையே சாலச்சிறந்தது. ஒரு வாரத்துக்கு ஒரு தடவையாவது சுற்றுப் புறச் சூழலை கண்கானிப்பதோடு வீதிகளிலோ, பொது இடங்களிலோ பிறர் மூலம் சேர்க்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பொருட்களை நாமாக முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 
SHARE

Author: verified_user

0 Comments: