மட்டக்களப்பு - கல்குடா எதனோல் உற்பத்திச்சாலை விவகாரம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் திருப்தியும் நம்பிக்கையும் இல்லை என்று பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியதற்கு அமைவாக வெள்ளிக்கிழமை 30.06.2017 வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஊடகவியலாளர்கள் இருவரும் அழைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற எதனோல் எரிசாராய உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற இரு ஊடகவியலாளர்கள் மீது, மார்ச் மாதம் 21 ஆம் திகதி அங்கு பணியாற்றும் சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கல்குடா பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரில் மாதம் 28ம் திகதி களுவாஞ்சிக்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு இரு ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
தங்களை 6 நபர்கள் தாக்கியதாக இரு ஊடகவியலாளர்களும் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தும் இருவர் மாத்திரமே இதுவரைக்கும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் தொடர்பாக எந்தவொரு பொலிஸ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பொலிஸ் மா அதிபருக்கு ஊடகவியலாளர்களால் முறையிடப்பட்டிருந்தது.
இதேவேளை, கல்குடாவில் சுமார் 24 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற எதனோல் எரிசாராய உற்பத்தி தொழிற்சாலை விவகாரத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதான வழக்கு விசாரணை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
அங்கு பணிபுரியும் ஊழியர்களான சந்தேக நபர்கள் இருவர் கடந்த 29.05.2017 அன்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஷ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஜுலை மாதம் 10ஆம் திகதிக்கு சந்தேக நபர்களை மீண்டும் ஆஜர்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
கல்குடாவில் எதனோல் எரிசாராய உற்பத்தி நிலையம் அமையப் பெறுவதை எதிர்த்தும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களும் அரசியல்வாதிகளும் பொது அமைப்புக்களும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment