28 Dec 2020

ஏறாவூரில் வர்த்தகம் செய்யும் காத்தான்குடி வியாபாரிகள் மீது கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்

SHARE

(ஏ.எச்.ஹுஸைன்)

ஏறாவூரில் வர்த்தகம் செய்யும் காத்தான்குடி வியாபாரிகள் மீது கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் கொரோனா வைரஸ் தொற்றும் மரணமும் ஏற்பட்டிருப்பதை அடுத்து ஏறாவூரில் வர்த்தகம் செய்யும் காத்தான்குடி வியாபாரிகள் மீது தீவிர கவனம் திரும்பியுள்ளது.

ஏறாவூரில் நிரந்தர கடைகளைக் கொண்டிருக்கும் சுமார் 20 இற்கு மேற்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை தமது சொந்த ஊரான காத்தான்குடிக்குப் பயணம் செய்வதை தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத் தலைவர் இஷ‪ற் ஏ. இனாயத்துல்லாஹ் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கம், ஏறாவூர் பொலிஸ், ஏறாவூர் நகர சபை, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அத்துடன் பிரதேச செயலகம் ஆகியவை இணைந்த கூட்டத்தில் எட்டப்பட்டு;ள்ள தீர்மானங்கள் குறித்து அவர் திங்கட்கிழமை 28.12.2020 விவரம் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இடம்பெற்ற ஏறாவூர் கொவிட் 19 தடுப்பு செயலணிக் குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டடுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளரினால் காத்தான்குடி வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலுக்கமைவாக ஏறாவூர் வர்த்தகர் சங்கமும் நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் ஏறாவூருக்குள் வெளிப் பிரதேசத்தில் இருந்து வியாபார நோக்கங்களுக்காகவும், அத்தியவசிய தேவையில்லாத ஏனைய விடயங்களுக்காகவும் வருவதனை வெளி ஊர் வர்த்தகர்கள் உட்பட அனைவரும் தற்காலிகமாக தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

அதேவேளை வெளிப்பிரதேசங்களில் இருந்து வியாபார நோக்கம் கருதி வருகை தந்து ஏறாவூர் பிரதேசத்துக்குள் தற்போது வசிப்பவர்கள், தொடர்ந்து வியாபாரம் செய்ய விரும்பினால் மறு அறிவித்தல் வரை ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து வெளியேறாமல் சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் சிபார்சின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் மேற்பார்வையில் பாதுகாப்பான முறையில் தங்களுடைய வியாபாரங்களை மேற்கொள்வதற்கு பொலிஸ் நிலையத்தில் பதிந்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் வெளிப் பிரதேசங்களில் இருந்து வியாபார நோக்கம் கருதி ஏறாவூர் பிரதேசத்திற்குள் வருகை தந்து மீண்டும் நாளாந்தம் வெளிப் பிரதேசத்திற்கு சென்று வரவேண்டிய நிலைமை காணப்படுபவர்கள் ஏறாவூர் பிரதேசத்திற்குள் வியாபாரம் செய்வதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட விதிமுறைகளுக்கு முரணாக இடம் பெறும் வர்த்தகங்கள், வெளிப் பிரதேசங்களில் இருந்து வருகை தருபவர்கள், தனியார் வகுப்புக்கள், நடைபாதை வியாபாரங்கள், சுகாதார அறிவுறுத்தல்களை மீறி இடம் பெறும் வைபவங்கள் என்பன தொடர்பில் பொதுமக்கள் ஏறாவூர் நகர பொலிஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானங்களை மீறும் நபர்கள், வர்த்தகர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத் தலைவர் இஷ‪ற் ஏ. இனாயத்துல்லாஹ்   மேலும் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: