20 Nov 2020

நீத்தார் நினைவாக நிறைந்திருக்கும் ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பி வாமதேவன்.

SHARE

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

நீத்தார் நினைவாக நிறைந்திருக்கும் ஊடகவியலாளர்  கதிர்காமத்தம்பி வாமதேவன்.

ஊடகவியலாளர் கிராம அலுவலர் சமூக சேவையாளர் சமாதான நீதிவான் சமூக சேவை அமைப்புக்களிலும் தொழிற் சங்கங்களிலும் பல பொறுப்புக்களை வகித்தவர் என்ற புகழைத் தன்னகத்தே கொண்டிருந்த கலாபூஷணம்‪ கதிர்காமத்தம்பி வாமதேவன் மறைந்து ஒரு வருடம் கழிகிறது.

கடந்த வருடம் நொவெம்பெர் 21ஆம் நாளன்று தனது 69வது வயதில் அன்னார் உடல் நலக் குறைவால் காலமானார்.

மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் 1950.12.02 இல் பிறந்த வாமதேவன் பதுளை வீதியை அண்டியுள்ள தம்பானம்வெளி கிராமத்தில் தனது இளமைக் கால வாழ்வைக் கழித்தார்.

தனது ஆரம்பக் கல்வியை ஏறாவூர் காளிகோயில் வித்தியாலத்திலும் ஏறாவூர் விவேகானந்தா வித்தியாலயத்திலும் கற்றதோடு தனது உயர் கல்வியை ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்திலும் நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து சமூக சேவைப் பணிகளில் தன்னை அர்ப்பணித்த வாமதேவன் எழுத்தாளர் அஹமட் லெப்பை மாஸ்டரிடமிருந்து பத்திரிகைகளுக்கு எழுதுவதற்கான பயிற்சிகளைப் பெற்று ஊடகத்துறைக்குள்ளும் நுழைந்தார்.

“சுதந்திரன்” பத்திரிகையின் செங்கலடி நிருபராக தன்னை இணைத்துக் கொண்ட வாமதேவன் பின்னாட்களில் தினபதி சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளின் செங்கலடி நிருபராகவும் செயற்பட்டார்.

இவ்வேளையில் எம்.ரீ. குணசேன பதிப்பகத்தாரின் தமிழ் வெளியீட்டுப் பிரிவின் பிரதம ஆசிரியரான எஸ்.ரீ. சிவநாயகத்தின் பாராட்டுக்களையும் அவர் பெற்றார்.

சமூக சேவையாளராக அறியப்பட்டிருந்த வாமதேவன் அதன் மூலமாக அவர் ஊடகவியலாளர் வாமதேவன் என அறியப்பட்டார்.

வாராந்தரியான சிந்தாமணிப் பத்திரிகையின் “அத்தாணி” மண்டபம் பகுதியில் அவர் எழுதி வந்த ஆக்கங்கங்கள் அலாதியானவை.

அதேபோல வீரகேசரிப் பத்திரிகையின் சித்தாண்டி நிருபராக அவர் சேவையாற்றியதோடு அப்பத்திரிகையில் பல்வேறு சமூக கலாசார பண்பாட்டு ஆன்மீக கட்டுரைகளையும் எழுதி வாசகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அவர் கிராம சேவகராக கடமையாற்றிய வேளையில் கிராம சேவகர்களின் தொழிற் சங்கங்களையும் ஸ்தாபித்து வழி நடத்தினார்.

மட்டக்களப்பு மாவட்ட ஓய்வுபெற்ற கிராம அலுவலர் சங்கத் தலைவராகவும் அவர் செயற்பட்டார்.

வடக்கு கிழக்கு மாகாண கிராம உத்தியோகத்தர்களின் சங்கச் செயலாளராக அவர் செயற்பட்ட காலத்தில் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் ஓய்வுபெற்ற கிராம அலுவலர்களின் சம்பள முரண்பாடுகளையும் அவர்கள்  காலாகாலமாக எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் உள்ளடக்கிய மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்து தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

இதைப்போன்று பல்வேறு  சமூக அமைப்பு நிருவாகங்களிலும் உயர் பதவிகளை வகித்து அவர் சமூக சேவை ஆற்றியுள்ளார்.

மேலும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அவர் ஓய்வின்றியும் சிவில் நிருவாகம் தங்கு தடையின்றியும் இடம்பெற்று மக்களுக்கான சேவைள் இடம்பெற வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக அப்போதைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும்  இருந்த ரத்னசிறி விக்கிரமநாயக்கவினால் சிறந்த கிராம அலுவலருக்கான பரிசும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அன்னாரது இறுதிக் கிரியையில் கலந்து கொண்ட பலரும் அவரது மங்காப் புகழ் கொண்ட அவரது சேவைகளைப் பாராட்டியிருந்தனர்.

அவரது நினைவை மீட்டிய பலர் அவருடனான நினைவுகளை இழப்பின் துயரமாக விவரிக்கின்றனர்.

அமரர் வாமதேவன் பற்றிய நினைவை மீட்டும்போது அவர் ஒரு அமைதியின் உறைவிடம் இங்கிதமான பண்புகளின் உதாரண புருஷன். இன ஐக்கியத்தின் இருப்பிடம் என ஏறாவூரைச் சேர்ந்த பன்மொழிப் புலமை கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான எம்.ஐ. பாறூக்  குறிப்பிட்டார்.

அமரர் வாமதேவன் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை மக்கள் சேவைக்காகவே அர்ப்பணித்தவர் அத்தோடு அவர் வாழ்ந்த  தம்பானம்வெளி கொடுவாமடு கிராமங்களுக்கு பல மக்கள் நலத் திட்டங்களை செயற்படுத்துவதற்கு முன்னோடியாக இருந்தவர் என்று மட்டக்களப்பின் முன்னாள் அரசாங்க அதிபர் இரத்தினம் மோனகுருசாமி தெரிவித்தார்.

யுத்த காலத்தில் ஓய்வின்றி மக்கள் நலனுக்காக எந்நேரமும் இயங்கிய அன்னார் ஒரு இரக்க சிந்தையும் தியாக மனப்பான்மையும் கொண்டவர் என்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் தொடங்கி கடைசியாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் நிருவாக உத்தியோகத்தராக கடமையாற்றிய அன்னாரது துணைவியார் இந்துமதி தனது கணவரின் மாறாத நினைவலைகளை மீட்டினார்.

 SHARE

Author: verified_user

0 Comments: