24 Oct 2020

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம்.

SHARE

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித்திட்டம் விரைவில் ஆரம்பம். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்காக உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் விசேட வேலைத்திட்டமாக முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.


மழைகாலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தினைக் குறைத்து வடிந்தோடும் மழை நீரினை முறையாக சேகரித்து விவசாயம் மற்றும் குடிநீர் பாவனைக்காகப் பயன்படுத்துவதற்கான திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

இதில் அம்பாறை மாவட்டத்திற்காக மகோயா நீர்தேக்கத்தினையும், மட்டக்களப்பு மாவட்டத்திற்காக உறுகாமம் மற்றும் கித்துள் நீர்த் தேக்கங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்விரு நீர்தேக்கங்களின் கொள்ளவு தற்பொழுது 28 எம்.சீ.எம். ஆகக் காணப்படுகின்றது. இதனை 58 எம்.சீ.எம். ஆக உயர்த்துவதாக இத்திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது. இருப்பினும் இம்மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடைகள், வனஜீவராசிகளின் குடிநீர் தேவைக்காக இந்நீர்தேக்கத்தின் கொள்ளவை மேலும் உயர்த்தவேண்டும் என கோரிக்கை பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருந்தது. 

மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திரு. கே. கருணாகரன் தலைமையில் இன்று (23) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இவ்வபிவிருத்தித் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலில் இந்நீர்த்தேக்கத்தின் கொள்ளவினை உயர்த்துவதினால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. இக்கொள்ளளவை அதிகரிப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வதாக திட்டப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.

இவ்விசேட கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் நடராசா நாகரத்தினம் முந்தனை ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்ட பணிப்பாளர் சமன் எஸ்.எல். வீரசிங்க, சிரேஸ்ட திட்ட பொறியியலாளர் எம். மயூரன், பிரத்தித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அமிர்தலிங்கம், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவாநன்தன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர். 

இதுதவிர இத்திட்டம் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2026 இல் முடிவுறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 







SHARE

Author: verified_user

0 Comments: