21 Feb 2020

மகா சிவராத்திரி தோன்றிய வரலாறு, சிறப்புகள், பலன்கள்.

SHARE

மகா சிவராத்திரி தோன்றிய வரலாறு, சிறப்புகள், பலன்கள்.சிவனுக்குப் பிரியமுள்ள சிவன் ராத்திரி தோன்றிய வரலாறு இங்கே காண்போம்

நினைத்தை அருளும் மகா சிவராத்திரி தோன்றிய வரலாறு!..

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

சிவராத்திரி என்றால் என்ன?

சிவனுக்குப் பிரியமுள்ள ராத்திரியே சிவன் ராத்திரி. சிவராத்திரி என்பதில் சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் இன்பம் என்று பொருள் கொள்ளலாம்.
மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம்.
இந்த நாளில் சிவன் கோவில்களுக்குச் சென்று வழிபட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். 
மாசி மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகாசிவராத்திரியாகும்.
 மகா சிவராத்திரி வரலாறு :

மகா சிவராத்திரி
மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில் இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.
நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை அதாவது சிவராத்திரி என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.
மகா சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை சிவன் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டுமென்று அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக்கொண்டாள்.
சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரி தோன்றிய விதம் :

ஒருமுறை பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள், உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு எங்கும் காரிருள் சூழ்ந்தது.
உலகம் கலங்கி நிழையிழந்தது. உடனே பெருமான் நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர்.
அப்போது உமையவள் பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
சிவனாரை வழிபட்ட பார்வதியாள் இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தரவேண்டும் என்று பரமனிடம் வேண்டிக் கொண்டாள்.
அப்படியே ஆகுக எனச் சிவபெருமானும் அருள்பாலித்தார், அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகா சிவராத்திரி.
புராணங்கள் போற்றும் மகா சிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி விரதம் இருந்து முழுக்க முழுக்க சிவனாரிடம் மனம் லயித்திருந்து இரவு கண் விழித்து நான்கு காலமும் சிவவழிபாடு செய்யவேண்டும்.
இதனால் துன்ப இருள் அகன்று சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் நம் வாழ்வு செழிக்கும்.

மகாசிவராத்திரி சிறப்புகள்! .. விடிய விடிய விரதம்! சிவ தரிசனம்!


ஆதியும் இல்லாத, அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியனாய், பிரம்மாண்டமாக லிங்க வடிவெடுத்து வெளிப்பட்ட நாளே மகாசிவராத்திரி.
மாசி மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் அற்புதமான நாள் இது. மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிவனுக்கு விடிய, விடிய அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
மாசி மாத தேய்பிறையில் சதுர்த்தியன்று மகாசிவராத்திரி வருகிறது.
முறைப்படி விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் சகல வளங்களையும் பெற்று வாழ்வில் மகிழ்ச்சியாக வளமாக வாழ முடியும்.

இந்த நாளில்…

மகா சிவராத்திரி எனும் புண்ணியம் நிறைந்த நன்னாளில், இரவில் நான்கு ஜாம பூஜைகள் நடைபெறும். அப்போது சிவலிங்கமானது குளிரக் குளிர வில்வங்களாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்படும். அவரின் மனம் குளிரக் குளிர ருத்ர ஜப பாராயணம், தேவாரப் பதிகங்கள் ஆகியவை பாடப்படும். சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்!
இந்த நாளில் விரதம் இருந்து, விடிய விடிய கண் விழித்து, நான்கு கால பூஜையையும் தரிசிப்பவருக்கு முக்தி தரவேண்டும் என பார்வதி தேவி ஈசனிடம் கேட்க, அப்படியே ஆகட்டும் என வரம் தந்தருளினார் ஈசன். எனவே, மற்ற நாளைவிட, மகா சிவராத்திரி நாளில் செய்யப்படும் பூஜை பன்மடங்கு பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம்!
திரியோதசி முன் இரவு வரை இருக்க, நடு இரவில் சதுர்த்தி வந்தால் அது மிக விசேஷம். அது உத்தம சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. சூரிய உதயம் முதல் மறுநாள் வரை சதுர்த்தசி இருப்பது மத்ய சிவராத்திரி.
முதல் நாள் இரவில் நிசி நேரத்தில் சதுர்த்தசி நேராமல் மறுநாள் இரவு நிசி நேரத்தில் சதுர்த்தசியும், அமாவாசையும் சந்திப்பது அதம சிவராத்திரி. சோமவாரத்தில் வரும் மகா சிவராத்திரி விரதத்திற்கு மூன்று கோடி சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
சிவராத்திரியில் சிவ தரிசனத்தைக் காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். குறிப்பாக, விரதம் மேற்கொண்டு சிவனாரைத் தரிசிப்பது இன்னும் பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து நித்தியக் கடன்களை முடித்து, நீராடி, சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். சிவபுராணம் பாராயணம் செய்து எதுவும் சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும்.
இரவில் தூங்காமல் சிவ நாமம் கூறி, சிவ கதைகளைக் கேட்டு நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்தால், சிவனருள் கிடைக்கப் பெறலாம்.
சிவராத்திரி தின பூஜையைக் கண்ட அசுரக் கூட்டம் தங்களையும் அறியாமல், ‘சிவ சிவ” என்று கூறினார்களாம். இதனால் அவர்கள் பாவங்கள் நீங்கியது. அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தார் ஈசன், என்கிறது புராணம்!
இத்தனை மகிமைகள் கொண்ட சிவராத்திரி விரதத்தை, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஆதிசேஷன், ஸ்ரீசரஸ்வதி முதலான கடவுளரும் மேற்கொண்டனர். சிவ தரிசனம் செய்து சிவனருளைப் பெற்றனர்!

SHARE

Author: verified_user

0 Comments: