19 Nov 2019

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தோல்வி அடைந்துள்ளார்களா?

SHARE
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தோல்வி அடைந்துள்ளார்களா?
தமிழ் மக்கள் வாக்களித்த சஜித் பிரேமதாசா வெற்றி பெறவில்லை. எனவே தமிழ் மக்கள் தோல்வியடைந்துவிட்டதாக  சிலர் கூறுகின்றனர். உண்மையில் தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை. அவர்கள் தமது முடிவை வழக்கம்போல் மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அது புரியாமல் சிலர் திருக்குறளுக்கு பொழிப்புரை கூறுவதுபோல் மக்களின் தீர்ப்பு குறித்து ஆளாளுக்கு கருத்து கூறுகின்றனர். 

என மட்டக்களப்பிலிருந்து செயற்பட்டுவரும் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமை (19) அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

மக்களின் இந்த தீர்ப்பு ராக்கட் சயின்ஸ்போல் சிக்கலானதாகவும் இல்லை. மாறாக அனைவரும் புரியும் வண்ணம் தெளிவாகவே உள்ளது. தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசா வரவேண்டும் என்று வாக்கு அளிக்கவில்லை. மாறாக கோத்தபாயா வரக்கூடாது என்றே வாக்களித்துள்ளனர். அதுமட்டுமல்ல, சம்பந்தர் ஐயா கூறியதற்காக சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. 

மாறாக கோத்தபாயா வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்தே சஜித் ஆதரவை சம்பந்தர் ஐயா அறிவித்தார். கோத்தா வந்தால் தமிழர் பிரதேசத்தில் அபிவிருத்தி நடக்கும் என்று சிலர் கூறியதையும் தமிழ் மக்கள் பொருட்படுத்த வில்லை. சஜித் வந்தால் கிழக்கில் முஸ்லிம் ஆதிக்கம் அதிகமாகும் என்று இன்னும் சிலர் மிரட்டியதைக்கூட தமிழ் மக்கள் பொருட்படுத்தவில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கோத்தபாயாவை மறக்கவோ அல்லது மன்னிக்கவோ தயாராக இல்லை. அவரை எதிர்ப்பது என்ற தீர்க்கமான முடிவில்தான் உள்ளார்கள். குத்துச் சண்டையில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிப்பதில்லை. மாறாக விழுந்தவர் எழுந்திருக்கவில்லையென்றால்தான் அவருக்கு தோல்வி என்று அறிவிக்கப்படும். விடுதலைப் போராட்டமும் ஓருவகையில் குத்துச் சண்டை போலத்தான். ஒரு இனம் விழுந்தவுடன் தோல்வி அடைவதில்லை. மாறாக எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அடைந்ததாக கருதப்படும்.

கோத்தபாயாவுக்கு எதிராக  வாக்கு அளித்ததின் மூலம் தாம் வீழ்ந்துவிட விடவில்லை என்பதை தமிழ் மக்கள் உலகிற்கு காட்டியிருக்கிறார்கள்.  தமிழ் மக்கள் மீண்டும் எழுந்து நிற்கிறார்கள். எனவே அவர்கள் தோல்வி அடைந்து விட்டதாக கூற முடியாது. என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: