22 Oct 2019

கல்விப் பணியில் 37 வருடங்கள் சேவையாற்றிய மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிப்பணிப்பாளர் ஓய்வு பெறுகின்றார்.

SHARE
கல்விப் பணியில் 37 வருடங்கள் சேவையாற்றிய மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிப்பணிப்பாளர் ஓய்வு பெறுகின்றார்.
ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை தான் வாழும் சமுகம் உயர்வடையப் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்குக்கிடைக்கும். அவ்வாறில்லாவிடின் அவன் கற்ற கல்வி பயனற்றுப் போய் விடும் என்ற குறள் வாக்கிற்கு இணங்க 37 வருடக் கல்விப் பணியிலிருந்து மட்டக்களப்புக் கல்வி வலய ஆங்கிலப் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் கணபதிப்பிள்ளை சந்திரகுமாரன் புதன்கிழமையுடன் (23)தனது அரசசேவையை திருப்திகரமாக ஆற்றிட்டு ஓய்வு பெறுகின்றார்.

இவர் ஆரையம்பதியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கலாபூசணம் மு.கணபதிப்பிள்ளை (மூனாகான) மற்றும் சின்னப்பிள்னை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனாக 23.10.1959 இல் ஆரையம்பதியில் பிறந்துளளார். இவர் தனது ஆரம்பக் கல்வியை ஆரையம்பதி இராமக் கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை  மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் கற்றுத் தனது உயர் கல்வியை மட்டக்களப்பு இந்துக் கல்லுரரியிலும் தொடர்ந்தார்.

கல்விப் பணியில் ஆங்கில ஆசிரியராக 26.04.1982 இல் நியமனம் பெற்று அரசடித்தீவு  விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தனது ஆசிரிய பணியைத் முதலில் தொடங்கினார்.பின்னர் பேராதனை ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆங்கில ஆசிரியராக பயிற்சி பெற்று, பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக செட்டிபாளையம் மகா வித்தியாலயம், கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயம் மற்றும் சிவாநந்தா வித்தியாலயத்திலும் ஆசிரியப்பணியை மேற்கொண்டார். தான் சேவையில் இருக்கும் போது ஆங்கிலத்தை ஒரு பாடமாகக்கொண்டு  கல்விமானிப் பட்டத்தை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பூர்த்தி செய்து பட்டதாரி ஆசிரியராக பணியை மேற்கொண்டார்.

இதன் பின்னர் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் பட்டபின் கல்வி டிப்ளோமாவை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதில் முதுமானிப்பட்டப் பரீட்சையில் சித்தியடைந்து அதனைப் பூர்த்தி செய்ய ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார். இவ்வாறு தனது ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.

இவர் 2006 ஆம் ஆண்டு ஆங்கிலப்பாட ஆசிரிய ஆலோசகராக மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இணைந்து 2007 ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெறும் வரை ஆங்கிலப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு கல்வி வலயத்தில் சேவையாற்றினார்.இவர் ஆங்கில ஆசிரியராக சேவையாற்றிய காலப்பகுதியில் தனது மாணவர்களை ஆங்கிலப்பாடத்தை விருப்பத்துடன் கற்க ஊக்கப்படுத்தியதுடன்  சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள வழிப்படுத்தி தனது மாணவர்களை ஆங்கில மொழித் தின போட்டிகளில் வெற்றியடைய வழிகாட்டியுள்ளார்.

ஆசிரிய ஆலோசகராகவும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்  சேவையாற்றிய காலப் பகுதியில் ஆங்கில ஆசிரியர்களை கற்பித்தல் செயற்பாடுகளில் பல்வேறு வகைகளில் பயிற்சி அளிக்கப்பட்டும்,ஆலோசனை வழங்கியும் வாண்மை விருத்தியை மேன்மையடையச் செய்துள்ளார்.மேலும், மட்டக்களப்பு கல்வி வலய மாணவர்களை பொதுப் பரீட்சையில் சிறந்த பெறு பேற்றினை பெறும் வகையிலும் ஆங்கில தினப்போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றியடையச் செய்யும் வகையிலும் செயலாற்றியுள்ளார்.இன்று இவருடைய மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு உயர் பதவியில் பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றார்.

இத்தகைய சிறப்பு மிக்க கல்விமான் ஓய்வு பெறுவது மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு ஒரு இழப்பாக இருந்த போதிலும் இது தவிர்க்க முடியாததாகும். மட்டக்களப்பு கல்வி வலய மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமுகம் இவரது சேவையை ஓய்வின் பின்னர் வேண்டி நிற்கின்றது.அத்துடன் அவர் மனைவி, பிள்ளைகள், உறவினர்களுடன் நலமாக நிறைவாக வாழ வேண்டும் என இறைவனைப் பிராத்திக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: