10 Jun 2019

எமது சக்தியினூடாக எமது ஆரோக்கியம் - சுகாதார மேம்பாட்டிற்கு பங்களிப்போம்.

SHARE
எமது சக்தியினூடாக எமது ஆரோக்கியம் - சுகாதார மேம்பாட்டிற்கு பங்களிப்போம்.
எமது சக்தியினூடாக எமது ஆரோக்கியம் - சுகாதார மேம்பாட்டிற்கு பங்களிப்போம் எனும் தொனிப்பொருளிலான பதாகை  மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் திங்கட்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின், ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் முறைமையை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
மகிழடித்தீவு, கல்லாறு போன்ற வைத்தியசாலைகளே மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பதாகை மகிழடித்தீவு வைத்தியசாலை வைத்திய அதிகாரி ரி.தவனேசன் தலைமையில், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.வி.பிறேமானந், திட்டமிடல் டொக்டர் கஸ்தூரி குகன், நிருவாக உத்தியோகத்தர் நித்தியாரஜணி, மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகளினால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த பதாகையில், ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான அத்தியவாசிய ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பினை வைத்தியசாலை வழங்குகின்றதென்றும், அதற்காக தரவு தளத்தில் தமது விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறும், 35வயதிற்கு மேற்பட்டவராகவிருந்தால், தொற்றா நோய்களுக்குரிய ஆபத்துக்காரணிகளான உடற்திணிவுச்சுட்டி, இரத்த அழுத்தம், இரத்தத்தில் சீனி மற்றும் கொழுப்பின் அளவைக் கண்டறிவதன் மூலம் ஆபத்தான காரணிகளை இனங்காணலாம். மேலும், மார்பக புற்றுநோய், கருப்பைக்கழுத்துப் புற்றுநோய், வாய்வழிப்புற்று நோய்குரிய பரிசோதனைகளை மேற்கொண்டு அவை இருப்பதனை இனங்காணலாம். சிறுநீரக நோய்க்குரிய பரிசோதனைகள், அவசரசிகிச்சை சேவைகள், வெளியாளர் சேவைகள் மற்றும் மதுபாவனை, போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகளும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளமையுடன், சிறந்த ஆரோக்கியத்தினைப் பெற வைத்தியசாலையில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் சரியான உடற்பயிற்சி செயல்முறையைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பொறிக்கப்பட்டுள்ளன.

குறித்த வைத்தியசாலை மின் சுகாதார அட்டை வழங்குதல் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமையுடன், குறித்த திட்டச் செயற்பாடுகள் மிகவிரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: