9 Apr 2019

வறுமை இருக்கும் இடத்திலே ஆரோக்கியமான எந்த அபிவிருத்தியையும் அடைந்து விட முடியாது. இஸ்லாமி;ய மார்க்க அறிஞர் ஏ.சி. அகார் முஹம்மத்

SHARE
வறுமை இருக்கும் இடத்திலே ஆரோக்கியமான எந்தவொரு அபிவிருத்தியையும் அடைந்து விட முடியாது என இஸ்லாமி;ய மார்க்க அறிஞரும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பிரதித் தலைவரும், ஜாமியா நழீமியா கலாபீடத்தின் பணிப்பாளருமான ஏ.சி. அகார் முஹம்மத் தெரிவித்தார்.
ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் திங்கட்கிழமை இரவு 08.04.2019 இடம்பெற்ற “ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியும் பாதுகாப்பும்” என்ற விழிப்புணர்வூட்டல் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

சமூக ஆர்வலர்கள் பங்குகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
முஸ்லிம் சமூகம் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்கு சில அடிப்படையான காரணிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கவேண்டிய கட்டாய கொடையான ஸக்காத் ஆகும்.

இந்த விடயம் பற்றிய முழுமையான விழிப்புணர்வும் செயற்பாடும் முஸ்லிம் தனவந்தர்களிடத்திலே வந்துவிடுமாக இருந்தால் கிட்டத்தட்ட எல்லாமே அடைந்து விட்ட ஒரு நிலையை நாம் உணரலாம்.

ஸக்காத் என்பது ஒரு தனவந்தர் தீர்மானிக்கும் விடயமல்ல, அது ஒரு கூட்டுப் பொறுப்பின் மூலம் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

ஒரு சமூகத்தின் மேம்பாட்டைத் தீர்மானிப்பதில் கல்வி, சுகாதாரம், ஒழுக்கப்பண்பாட்டு விழுமியங்கள் இவைகளோடு பொருளாதாரக் காரணி மிக முக்கியமானது.

பொருளாதார நிலை சீராகாமல் அச்சமூகத்தின் கல்வி நிலை, சுகாதாரம், ஆன்மீகம், ஒழுக்கப்;பண்பாடுகள் இவற்றில் எவையுமே சீராக மாட்டா.

வறுமை இருக்கும் இடத்திலே ஆரோக்கியமான நம்பிக்கையை (ஈமானை)  எதிர்பார்க்க முடியாது.

ஆரோக்கியத்தை எதிர்பார்க்க முடியாது. முன்மாதிரிகளைக் காண முடியாது. கற்றறிந்த  சமூகத்தைக் காண முடியாது.
இவ்வாறானதொரு நிலைமை மிகப் பயங்கரமானது.

சிறந்த பண்பாட்டு ஒழுக்கங்களும் காலப்போக்கில் வறுமையின் காரணமாக சீரழிந்து போகும் நிலை ஏற்படும்.

சமூகத்தைப் பொருளாதமார ரீதியில் கட்டியெழுப்ப குறுங்கால நீண்டகாலத் திட்டங்கள் தீட்டப்பட்டு அவை அமுல்படுத்தப்பட வேண்டும்.

நிலைபேறான அபிவிருத்திக்கான வேலைத் திட்டங்கள் மிகச் சரியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதற்கான காத்திரமான திட்டங்களாக உழைப்பை ஊக்குவிக்க வேண்டும். எவரும் பிறர் தயவில் கையேந்தி வாழக் கூடாது என்று ஊக்குவிக்க வேண்டும்.

வறுமையை ஒழிப்பதற்கான முதல்தர வாழ்வாதாரத் திட்டங்களில் இதுவுமொன்று.
எனவே, இந்த விடயத்தில் சமூக, அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புக்கள் பிறரில் தங்கி வாழ்பவர்களாக எவரும் இருக்கக் கூடாது என்ற வகையிலமைந்த வாழ்வாதாரத் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
இது இஸ்லாம் எதிர்பார்க்கின்ற விடயம்.

நடைமுறைச் சாத்தியமான முறையில் முன்வைக்கின்ற மற்றொரு தீர்வு ஏழைகளுக்குரியதை வழங்கி வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதாகும்.

எனவே, பொருட் செல்வத்தையும் அறிவுச் செல்வத்தையும் இன்னோரன்ன செல்வங்களையும்  கொண்டிருக்கின்றவர்கள் அவை கிடைக்காதவர்களுர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க வேண்டும். அப்பொழுது இந்த சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியும் அதன் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: