24 Dec 2018

இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் சாரதி மீது முச்சக்கரவண்டியில் துரத்திச் சென்று தாக்குதல் மூவர் கைது.

SHARE
இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் சாரதியை பஸ் பயணிகள் சேவையிலீடுபட்டுக்கொண்டிருந்தபோது முச்சக்கர வண்டியில் துரத்திச் சென்று வழிமறித்துத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 23.12.2018 ஓட்டமாவடி பாலத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளான இலங்கைப் போக்குவரத்துச் சபை கிண்ணியா பஸ் சாலை சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் சேவையிலீடுபடும் திருகோணமலை – கல்முனைக்கான இலங்கைப் போக்கு வரத்துச் சபை பஸ் வழமைபோன்று ஞாயிற்றுக்கிழமையும் சேவையிலீடுபட்டபோது முச்சக்கர வண்டியில் பஸ்ஸைப் பின் தொடர்ந்த நபர்கள் ஓட்டமாவடிப் பாலத்தில் வைத்து பஸ்ஸை வழிமறித்து அதன் சாரதியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வேளையில், எதிர்பாராத விதமாக சாரதி மீது திடீர்த் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வேளையில் பஸ்ஸிலிருந்த பயணிகளும் அச்சடைந்துள்ளனர்.
உடனடியாக வாழைச்சேனைப் பொலிஸாருக்கு சம்பவம் தெரியப்படுத்தப்பட்டதும் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வாழைச்சேனை – பொத்துவில் தனியார் பஸ் போக்கு வரத்துச் சேலையிலீடுபடும் மூவரைக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.
மட்டக்களப்பு – பொத்துவில் மார்க்கத்தில் தனியார் போக்குவரத்துச் சேவையிலீடுபடுவோரும் இலங்கைப் போக்கவரத்துச் சபை பஸ் சேவையிலீடுபடுவோரும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதும் பஸ்களுக்கு கல்லெறிந்து சேதத்தை விளைவிப்பதும் நடப்பதால் பயணிகள் அச்சமடைய நேரிடுகிறது என்றும் இத்தகைய அநாகரிக வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பயணிகள் வேண்டுகோள் முன்வைக்கின்றனர். ‪

SHARE

Author: verified_user

0 Comments: