4 Nov 2018

குழம்பிப் போயிருக்கின்ற தற்போதைய அரசியல் நகர்வுகளை சிறுபான்மை மக்கள் மிக அவதானமாக கவனித்து அதற்கான காவல் அரண்களை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது நஸீர் அஹமட்

SHARE
குழம்பிப் போயிருக்கின்ற தற்போதைய நாட்டு நடப்பின் அரசியல் நகர்வுகளை சிறுபான்மை மக்கள் மிக அவதானமாக கவனித்து அதற்கான காவல் அரண்களை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார்.
தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை 04.11.2018 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சியதிகார அரசியல் குழப்பங்களுக்கு அப்பால் சிறுபான்மைக் கட்சிகள் தேர்தல் முறைபற்றி கவனம் செலுத்த வேண்டும்.

அரசியல் ஆட்சியதிகார மாற்றங்கள் எது நடந்தாலும், அது ஜனநாயக அடிப்படையில் எது உண்மையோ, நியாயமோ, தர்மமோ அதன் அடிப்படையில் இடம்பெறவேண்டும் என்ற நம்பிக்கை ஊட்டக் கூடியதான அரசியல் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதனிடையே, தற்போது வீசத் தொடங்கியிருக்கும்  அரசியல் சூறாவளியில் அகப்பட்டு சிறுபான்மை சமூகங்கள் யதார்த்தத்தை மறந்து சிதறுண்டு விடக்கூடாது.

இலங்கையின் தேர்தல் முறையில் இன்னமும் இழுபறியும் குழப்ப நிலையும் தொடர்கிறது.

கலப்புத் தேர்தல் முறையால் சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளினதும் ஜனநாயக பிரதிநிதித்தும் பாதிக்கப்படும் வாய்ப்பே யதார்த்தத்தில் உள்ளது. குறிப்பாக சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்கள் தமது பிரதிநித்துவங்களை இழந்து மிக மோசமாகப் பாதிப்படையக் கூடிய சூழ்நிலையே உள்ளது.

அதனால் கலப்புத் தேர்தல் முறையை முற்றாகப் புறக்கணித்து பழைய தேர்தல் முறையில் விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் சிறுபான்மை கட்சிகளும் சிறு கட்சிகளும் அவதானம் கொண்டு செயல்பட வேண்டும்.

நாட்டில் தற்போது 3 மாகாண சபைகளே இயங்குகின்றன.
ஏனைய 6 மாகாண சபைகளும் தமது ஆட்சிக்காலம் முடிவுற்ற நிலையில் மாகாண ஆளுநரின் ஆட்சியின் கீழுள்ளன.

மீளவும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்குப் பொறுப்பாக அமைச்சர் பைஸர் முஸ்தபா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவிய மாகாண எல்லை நிர்ணய அறிக்கையை தூசுதட்டி எடுத்து மீண்டும்  கலப்பு முறையில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தும் எண்ணங்கள் முன்னெடுக்கப்படக் கூடும்.

எனவே இத்தகைய திரைமறைவு நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல், பழையதேர்தல் முறையில் விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் சிறுபான்மை கட்சிகளும் சிறு கட்சிகளும் அவதானம் கொண்டு செயல்பட வேண்டும்.

தற்போதைய அரசியல் குளறுபடிகளை பார்க்கும் போது ஜனநாயக நடைமுறைகள் குறித்த ஐயம் எற்படுகின்றது.

தத்தமது வசதிகளுக்கும் வாய்ப்புகளும் ஏற்றாற் போல் ஜனநாயக நடைமுறைகளை அதிகார பலம் கொண்டுமாற்றி அமைத்துச் செயற்பட முடியும் என்ற தோற்றம் எதிலும் கோடிகாட்டி நிற்கிறது.

இந்நிலையில் தொடர்ந்து தள்ளிச் சென்று கொண்டிருக்கின்ற மாகாண சபை தேர்தல் குறித்து இவ்வேளையில் நாம் கவனம் கொள்ளாமல் இருக்க முடியாது. சிறுபான்மை மக்கள் என்ற முறையில் இது எமக்கு முக்கியமானது.

எமது பிரதிநிதித்துவங்கள் குறித்தும் எமது வாழ்வியல் இருப்புக்குறித்தும் நாம் கவனமின்றி இருந்துவிட முடியாது.

சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் குறைவை எற்படுத்தும் நோக்கில் திரைமறைவில் காய்நகர்தல்கள் மேற் கொள்ளப்படுமானால் அதனை எதிர்த்து நாம் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் முஸ்லிம் மக்களுக்குப் பாராதூரமானதாகவே அமைந்திருந்தது. இதை நாம் அங்கீகரிக்க முடியாது”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: