22 Oct 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் 260 கிலோமீற்றர் நீளமான காட்டு யானைகள் தடுப்பு வேலித் திட்டம் அமுல் மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார்

SHARE
காட்டு யானைகள் மனித குடியிருப்புப் பிரதேசங்களுக்குள் ஊடுருவி அழிவுகளை ஏற்படுவதைத் தடுப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 260 கிலோமீற்றர் நீளமான காட்டு யானைகள் தடுப்பு வேலித் திட்டம் அமுலாவதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறமான வன ஜீவராசிப் பிரதேசத்தை அண்டி வாழும் மங்களகம கிராம மக்களுடனான சந்திப்பொன்றில் ஞாயிற்றுக்கிழமை 21.10.2018 கலந்து கொண்ட அரசாங்க அதிபர் காட்டு யானைகள் ஊடுருவல் சம்பந்தமான பொதுமக்களின் அச்சத்திற்கு பதிலளித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், காட்டு யானைகளையும் அதேவேளை மனிதர்களையும் ஒரு சேரப் பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு உண்டு.

மனிதர்களும் அவர்களது உடமைகளும் காட்டு யானைகளின் துவம்சத்தினால் பாதிக்கப்படக் கூடாது என்கின்ற அதேவேளை காட்டு யானைகளும் மனிதர்களால் பாதிப்படையக் கூடாது என்கின்ற கடமைப் பொறுப்பு எம்மிடம் உள்ளது.

காட்டு யானைகள் மனித குடியிருப்புப் பிரதேசங்களுக்குள் ஊடுருவி குடியிருப்புக்களையும் பயன்தரும் விவசாய முயற்சிகளையும் துவம்சம் செய்து வருவது பரவலாக எங்கும் இடம்பெறுகின்றது.

காடுகளை அண்டிய தூரப்புறக் கிராமங்களுக்குள் மாத்திரமல்ல ஏறாவூர் நகர பிரதேசத்திற்குள் கூட காட்டு யானைகள் ஊடுருவியுள்ளன என்பது ஆச்சரியமளிக்கின்றது.

சமீப சில நாட்களுக்குள் முன்னர் எமது ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தை அண்டிய பகுதிகளுக்குள்ளும் காட்டு யானைகள் ஊடுருவி இருந்தன.

ஆகையினால் காட்டு யானைகள் குறித்த அச்சமும் அவை ஏற்படுத்தும் அழிவுகளும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு மட்டும் உரியவை அல்ல.

எனினும், இந்த காட்டு யானைகள் - மனிதர்கள்  எனும் விடயம் குறித்து நாம் பாதிப்பில்லாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அந்த வகையில் குறிப்பாக மனிதக் குடியிருப்புக்கள் உள்ள பகுதிகளுக்குள் காட்டு யானைகள் ஊடுருவுவதைத் தடுக்க காட்டு யானைகள் தடுப்பு வேலி அமைக்கும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுலாகிக் கொண்டு வருகின்றது.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் ஏற்கெனவே 125 கிலோமீற்றர் நீளமான வனப்பகுதிகளின் எல்லைகளில் காட்டு யானைத் தடுப்பு வேலிகள் அமைத்தாகி விட்டது.
எமது சாத்திய வள ஆய்வின் அடிப்படையில் காட்டு யானைகள் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று கண்டறியப்பட்ட மேலும், எஞ்சியுள்ள 135 கிலோமீற்றர் நீளமான பகுதிக்கு காட்டு யானைத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

வெகு விரைவில் இந்தாண்டின் இறுதிப் பகுதி மேலும் அடுத்தாண்டின் துவக்கம் ஆகிய காலப்பகுதிக்குள் அந்த வேலிகள் அமைக்கப்பட்டு விடும்.

அதன் பின்னர் நடைமுறையில் காட்டு யானைகள் ஊடுருவல் எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு மேலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கிராம மக்கள் அச்சமின்றி வாழ வழியேற்படுத்தப்படும்.” என்றார்.




SHARE

Author: verified_user

0 Comments: