4 Oct 2016

கல்முனை தமிழருக்கென மத்திய கல்வி வலயம் - ஆரிப் சம்சுடீனை சாடினார் இராஜேஸ்வரன்

SHARE
(டிலா )

தமிழருக்கென கல்முனை மத்திய கல்வி வலயம் அமைக்கப்படுவது இனவாதசெயல் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் குறிப்பிட்டுள்ளமை அவரின் அரசியல் அறியாமையாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் தெரிவிதார்.
திருக்கோவில் அலிகம்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் தின வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில்;

தமிழர்களாகிய நாம் ஏனைய இனத்தவரின் உரிமைகளை புறந்தள்ளிவிட்டு எமக்கு மட்டும் முழுநிறைவான உரிமைகளை நாம் கேட்கவில்லை. கடந்தகால போர்ச்சூழலால் எமது தமிழ் மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இருந்து எமது மாணவர்களை பாதுகாக்கவே நாம் தனியான கல்வி வலயம் ஒன்றைக் கோரியிருக்கின்றோம்.

முஸ்லிம்களைப் பகைத்துக் கொண்டு தமிழர்களும், தமிழர்களைப் பகைத்துக் கொண்டு முஸ்லிம்களும் வாழவேண்டும் என்ற தேவைப்பாடு எமக்கு இல்லை. தமிழர்களாகிய நாம் தனியான கல்வி வலயத்தை கோருவதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலத்தொடர்புகளற்ற வகையில் மட்டக்களப்பு மத்தி என்ற கல்வி வலயம் பல வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் அரசியல் தலைமைகளால் உருவாக்கப்பட்டது. இதன் பேறாக அந்த வலயம் இலங்கையில் சிறந்த கல்வி வலயமாகவும் மிளிர்கிறது. இதனைப் பார்த்து நாம் பொறாமை கொள்ளவில்லை. அன்று நாம் இந்த வலயம் உருவாகும் போது எந்தவிதமான விமர்சனங்களையும் செய்யவில்லை. இந்த வரலாற்றை சகோதரர் ஆரிப் சம்சுடீன் அறிவாரா?

சம்மாந்துறை கல்வி வலயத்தில் முஸ்லிம் பாடசாலைகளும், தமிழ் பாடசாலைகளும் உள்ளன. அங்கு வலயக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய ஒருவர் ஓய்வு பெற்றதன் பின்னர் இப்பதவிக்கு சிரேஷ்ட நிலையிலுள்ள இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியாயின் அந்த வாய்ப்பு தமிழர் ஒருவருக்கே கிடைத்திருக்க வேண்டும். இதனையிட்டு நாம் அலட்டிக் கொள்ளவில்லை.

எம்மைநாமே ஆள முற்படுவதை இனவாதமாக கருதினால் எம்மை பிறர் ஆள முற்படுவதை என்னவென்று சொல்வது. இன்று குறைந்த அளவான பாடசாலைகளுடன் பொத்துவில் கல்வி வலயம் தோற்றம் பெறவுள்ள நிலையில் கூடியளவான தமிழ்ப் பாடசாலைகளை கொண்டு கல்முனை மத்தி கல்வி வலயம் உருவாகிவதை தவறாக கொள்ளக் கூடாது.

நாம் பொத்துவில் பிரதேசத்திற்கு தனியான கல்வி வலயம் உருவாகிவதை மனப்பூர்வமாக ஆதரித்தமை போன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் எமது நியாய பூர்வமான கோரிக்கை நிறைவேற முட்டுக்கட்டையாக இருப்பதை அனுமதிக்க முடியாது என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: