3 Aug 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பூர்த்தி.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பூர்த்தி.
பொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்களப்பு தினம் எதிர்வரும் 05 ஆந்திகதி நடைபெறவிருக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமுகமான தேர்தலினை நடாத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் திங்கட்கிழமை (03) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தேர்தல் நடாத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேன கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத்தேர்தலினை சுமுகமாக நடாத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள 428 வாக்குச் சாவடிகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 57 நடமாடும் பொலிஸ் பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக விசேடமாக இரண்டு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டு பொலிஸ் காவலரன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான போக்குவரத்து  மாற்றுப் பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வீதித்தடை ஒழுங்குகள் மற்றும் லைட் சமிக்ஞைகள் என்பன பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கான மின்விளக்கு ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் அறிவுறுத்தல்களுக்கமைய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பிற்காக வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்வதற்கும், வாக்களிப்பின் பின்னர் வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டுவருவதற்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மற்றும் தேர்தலுக்குப் பின்னர் வன்செயல்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பிரதேசங்கள் மற்றும் பிரமுகர்களின் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக வீதித் தடைகள், நடமாடும் பொலிஸ் பிரிவுகள், மோட்டார் சைக்கிள் நடமாடும் பிரிவுகள் என்பன ஏற்படுத்தப்பட்டடுள்ளது. 

இதுதவிர தேர்தல் சட்டவிதிகளுக்கமைவாக சட்டவிரோத கட்டவுட்கள், பதாதைகள், சுவரொட்டிகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளும், அதற்கான பணியாட்களும் தயார்நிலையில் உள்ளதுடன் வாக்களிப்பு நிலையத்திற்கு அன்மித்த 500 மீற்றர் சுற்றுப்புறத்தில் இவ்வாறான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் லக்ஸ்ரீ விஜேசேன கருத்து தெரிவித்தார்.

இவ்விசேட கூட்டத்தில் உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன், மட்டக்களப்புக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மென்டிஸ், விசேட பாதுகாப்பு கடமைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான சாமிக பிரேமஸ்ரீ ஏ.எம்.எம். நவாஸ் மற்றும் தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். 









SHARE

Author: verified_user

0 Comments: