28 Jun 2020

இரவோடிரவாக முகத்துவாரம் அனுமதியில்லாமல் வெட்டப்பட்டதால் பதற்றம் பொலிஸார் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் மாவட்ட செயலகத்தில் மீண்டும் அவசர கூட்டம்.

SHARE
இரவோடிரவாக முகத்துவாரம் அனுமதியில்லாமல் வெட்டப்பட்டதால் பதற்றம்
பொலிஸார் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள்
மாவட்ட செயலகத்தில் மீண்டும் அவசர கூட்டம்.
மட்டக்களப்பு வாவியையும் கடலையும் இணைக்கும் முகத்துவாரம் எனும் நீர் வழிந்தோடும் பகுதி இரவோடிரவாக சிலரால் வெட்டி அகற்றப்பட்டதால் அவ்விடத்தில் பிரதேச வாசிகளுக்கும் முகத்துவாரத்தை வெட்டுவதில் ஈடுபட்ட சிலருக்குமிடையில் பதற்றநிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை 27.06.2020 இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் வைக்க பொலிஸாரும் படையினரும்  வரவழைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் கரைவாகுப்பற்று நற்பிட்டிமுனை கிட்டங்கி நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது செய்கை நிலங்கள்  முழுமையாக வாவிப் பெருக்கு நீரினால் பாதிக்கப்படுவதால் அதனை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அவ்வேண்டுகோள் சனிக்கிழமை பகல் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது முகத்துவாரம் வெட்டி அகற்றப்பட முடியாது என தீர்மானம் எடுத்திருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் விபரீமாவதைத் தடுத்து அவ்விடத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக சம்பவம் அறிந்து மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் உட்பட  முன்னாள் அரசாங்க அதிபர் எம்உதயகுமார்மாநகர சபை உறுப்பிர் சிவம் பாக்கியநாதன் ஆகியோர் அவ் இடத்திற்கு விரைந்தனர்.
இது விடயமாக முகத்துவாரத்தை வெட்டி அகற்றுவதிலும் அதனைத் தடுத்து நிறுத்துவதிலும் ஈடுபட்ட இரு சாராருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் வன்முறைக்குத் தூபமிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மீண்டும் அவசர கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கூட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது





SHARE

Author: verified_user

0 Comments: