11 Feb 2020

மட்டக்களப்பு தமிழ் சங்க கட்டிடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெறும்.

SHARE
மட்டக்களப்பு தமிழ் சங்க கட்டிடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெறும்.
மட்டக்களப்புத் திருமலை வீதி பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச் சங்க கட்டிடத் திறப்பு விழா எதிர்வரும் மாசித் திங்கள் பதினைந்தாம் நாள் சனிக்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெறவிருக்கின்றது.

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி   தலைமையில் நடைபெறவிருக்கின்ற இப்பெரு விழாவில் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவிருக்கும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் கௌரவ தி.சரவணபவன் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா, தமிழ் சங்கத் தலைவர்  வி.ரஞ்சிதமூர்த்தி சங்கப் பொருளாளரும் கட்டிட குழுத் தலைவருமான தேசபந்து மு. செல்வராஜா ஆகியோர் இணைந்து கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளனர்.

இந் நிகழ்வு பிள்ளையாரடி புரவிப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு தமிழ் சங்க கட்டிட வாசலில் வரவேற்பு உபசாரங்கள் நடைபெறவிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து கட்டிட நிர்மாண கொடையாளிகளின் நாமம் பொறித்த நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்யப்பட்டு கட்டிட வாசல் முன்றலில் கம்பீரமாக காட்சியளிக்கும் வான் புகழ் கொண்டு விழங்கும் திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து திறப்பு விழா தொடர்ந்து நிகழும்.

இந் நிகழ்வில் கட்டிட நிர்மானக் குழுத் தலைவர் தேசபந்து மு.செல்வராஜா உட்பட பதின் நான்கு கொடையாளிகளின் நாமம் செய்யப்படும். மேலும் இக்குழுவினர் மட்டக்களப்பு தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பார்கள். கட்டிடநிர்மான குழுவினரை தமிழ்ச் சங்கமும் பாராட்டி கௌரவம் வழங்கவிருக்கினறது. மேலும் இத் திறப்பு விழாவை நினைவு கூறும் வகையில் சிறப்பு மலரும் வெளியிடப்பட விருக்கன்றது.

மேலும் இவ்வைபவத்தை சிறப்பிக்க மட்டக்களப்பு ரிதம் கலைக் குழுவினரின் வரவேற்பு நடனமும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவன மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம் பெறவிருப்பதோடு மலர்குழு ஆசிரியர் தேசியக் கலைஞர் வெல்லவூர்க் கோபால் கட்டிட வரைஞர் எஸ்.லோகேந்திரதாஸ், அதற்குப் பொறுப்பாகவிருந்த எந்திரி.ரகு ஆகியோரும் கட்டிடத்தை கட்டி நிறைவு செய்த கொத்தனார் கலைஞர் குழுத் தலைவரும் கௌரவம் பெறவிருக்கின்றனர்.

மீன்பாடும் தேன்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந் நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு தமிழ் மீது ஆர்வம் கொண்ட அனைவரையும் மட்டக்களப்பு தமிழ் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.  





SHARE

Author: verified_user

0 Comments: