20 Jan 2019

காத்தான்குடியில் நஞ்சற்ற உணவு விற்பனை ஆரம்பித்து வைப்பு

SHARE
காத்தான்குடி நகர பிரதேச மக்களின் ஆரோக்கிய உணவு நுகர்வுக்காக நஞ்சற்ற உணவுற்பத்தியும் அதன் விற்பனையும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நகரத்தின் மேயர் எஸ்.எச். முஹம்மத் அஸ்பர் தெரிவித்தார்.
காத்தான்குடி நகரத்திலுள்ள மீராபாலிகா சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை 20.01.2019 இத்தகைய இயற்கை நேய நஞ்சற்ற உணவுப் பொருள் விற்பனை நிலையம் நகர மேயரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அங்கு நிகழ்வில் நகர மேயர் கருத்துத் தெரிவித்தார்.

சமகால அவசர இயந்திர வாழ்க்கை முறையில் இயற்கை நேய உணவு உற்பத்தி, நுகர்வு, வாழ்க்கை முறை என்பன தூரமாகிப் போனதால் மனிதர்களும் சூழலும் உபாதைக்குள்ளாகி வருவதால் மீண்டும் மனித சமூகம் பாரம்பரிய நஞ்சற்ற உணவுற்பத்திக்கும் நுகர்வுக்கும் திரும்ப வேண்டும்.

அதனால் இத்தகைய நஞ்சற்ற உணவு உற்பத்திக்கும் நுகர்வுக்கும் அதன் விற்பனைக்கும் காத்தான்குடி நகர சபை தொடர்ந்தும் ஆதரவளிக்கும்.

அவசர வாழ்க்கையில் அல்லல் படுவோர் பாரம்பரிய அமைதி வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றும் நகர மேயர் தெரிவித்தார்.

இவ்விற்பனைச் சந்தையில் இரசாயனங்கள் பாவிக்கப்படாது இயற்கைப் பசளைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகள், தானியங்கள், நெல்லரிசி (கைக்குத்தரிசி), உப உணவு உற்பத்திப் பொருட்கள், சேதனப் பசளைகள் என்பன இடம்பிடித்திருந்தன. 




SHARE

Author: verified_user

0 Comments: