5 Dec 2018

கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஏறாவூர் நகர சபை எச்சரிக்கை

SHARE
ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட கொழும்பு- மட்டக்களப்பு நெடுஞ்சாலை, புன்னைக்குடா, ஆற்றங்கரையோர வீதிகளில் கட்டாக்காலி ஆடு, மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அவற்றின் உரிமையாளர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும் என ஏறாவூர் நகர சபையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக எறாவூர் நகர சபை புதன்கிழமை 05.12.2018 விடுத்துள்ள பொது அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏறாவூர் நகர பிரதேசத்தில் அலைந்து திரியும் ஆடு, மாடு போன்ற கட்டாக்காலிகளால் பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள், பாடசாலை மாணவர்கள், சிறார்கள், வயோதிபர்கள் பொதுமக்கள் என பலரும் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதடன் பல்வேறு விபத்துக்களும் இதனால் ஏற்படுகின்றன.
மேலும் இக்கால்நடைகளால் பொதுச்சொத்துக்களுக்கு சேதமும் விளைவிக்கப்படுகின்றன.

எனவே, இவ்விடயத்தில் கால்நடை உரிமையாளர்கள் கூடிய கவனம் எடுக்குமாறும், பொதுமக்களுக்கு அசௌகரியங்களையும் சேதங்களையும் ஏற்படுத்தும் இக்கால்நடைகளின் நடமாட்டத்தினை குறைப்பதற்கு நகரசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஏறாவூர் நகர சபை நிருவாகம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றது.

இதனை மீறும் பட்சத்தில் தண்டப்பணம் அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும் என பல முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏறாவூர் நகர சபையின் அறிவுறுத்தல்களை கட்டாக்காலிகளின் உரிமையாளர்கள் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை.

தொடர்சியாக கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இது விடயமாக பொதுமக்களிடமிருந்தும் சமூக நிறுவனங்களிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்த  வண்ணமுள்ளன.

எனவே, அந்த முறைப்பாடுகளுக்கமைவதாக  கட்டாக்காலிகளைக் கைப்பற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்படும் கட்டாக்காலிகளுக்குத் தண்டப்பணமாக தலா 3000 ரூபாய் அறவிடப்படும்.

ஏற்கெனவே புன்னைக்குடா வீதியில் அமைந்திருக்கும் பொதுச்சந்தையிலும், கிராம நீதிமன்ற வீதி முன்பாகவும் 3 கட்டாக்காலி மாடுகள் நகரசபையின் சுகாதார ஊழியர்களால் கைபற்றப்பட்டுள்ளன.

மூன்று தினங்களுக்குள் அதனதன் உரிமையாளர்கள் நகரசபையால் கைபப்ற்றப்படும் கட்டாக் காலிகளை மீட்டெடுக்க வேண்டும் இல்லையேல் அடையாளம் காணப்படாத இக் கால்நடைகள் அரச சொத்தாக கருதப்படும்.”என்று ஏறாவூர் நகர சபையின் பொது அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.








SHARE

Author: verified_user

0 Comments: