17 Dec 2018

இனவாதத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர் ஏ. செல்வேந்திரன்

SHARE
இனவாதத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர் ஏ. செல்வேந்திரன்
இனவாதத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகரும் மட்டக்களப்பு பிரஜைகள் அபிவிருத்தி மையத்தின் தலைவருமான ஏ. செல்வேந்திரன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமையில் இனவாதம் மீண்டும் தலைதூக்குவது குறித்து அவர் திங்கட்கிழமை 17.12.2018 கருத்து வெளியிட்டார்.

இது விடயமாக அவர் மேலும் கூறியதாவது,
ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமாக இருந்தால் இலங்கையிலே இனவாதம் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களிலே அவர்கள் தம்வசம் எடுத்துக் கொள்கின்ற, அவர்களது வெற்றிக்குத் தோதாய் அமைகின்ற ஒரு கூரிய, பாரிய ஆயுதம் இனவாதமாகும்.

ஆகவே இனவாதத்ததை நாம் எவ்வாறு கையாளப்போகின்றோம் என்பதுதான் நம்முன்னுள்ள கேள்வியாகும்.

இனவாதத்தைத் துடைத்தெறிந்தால்தான்  இலங்கையில் ஒரு சுபீட்சமான நிலையைக் கொண்டு வரலாம்.

மஹிந்தவாயினும் மைத்திரியாயினும் அவர்கள் இனவாதத்தையே தமது கைவசம் முதலீடாக வைத்துள்ளார்கள்.

ரணிலுடன் தமிழ்த் Nதுதசியக் கூட்டமைப்பு இரகசிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளது என அவர்கள் இப்பொழுது கூவித் திரிகின்றார்கள்,
இவ்வாறான இனவாதக் கருத்துக்கள் எங்கே போய் முடியுமோ தெரியாது.

தேர்தல் காலங்கிளிலே எவரும் இனவாதத்தை கையிலெடுக்கக் கூடாது என்று அரசியலமைப்பிலே 20வது திருத்தமாக கட்டாயச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

தேர்தல் காலங்களிலே இனங்களைக் கூறு போட்டு முரண்பாடுகளைத் தோற்று வித்து அழிவுகளை உண்டாக்கக் கூடிய எந்த வாசகங்களும் பிரயோகிக்கக் கூடாது என்றும் அதனையும் மீறி அரசியல்வாதிகள் இனவாதத்துடன் செயற்படுவார்களேயானால் அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாமலாக்கப்படும் என்பதை அரசியலைமப்பு ரீதியாகக் கொண்டு வந்து சட்டமாக்க வேண்டும்.

எங்கும் எதிலும் சிறிதளவேனும் இனவாதமில்லாத இவ்வாறான சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால்தான் இலங்கையில் ஜனநாயகத்தையும் சமூக மேம்பாட்டையும்  புதிதாகக் கட்டியெழுப்ப முடியும்.

அமைதியான ஜனநாயகத்தின் மூலம், அனைத்து இன மக்களின் பொருளாதாரமும் வாழ்வாதாரமும், கல்வி சுகாதார வளர்ச்சியும் சிறப்பாக இடம்பெறும்.

எனவே, இந்த விடயத்தில் சமாதான செயற்பாட்டாளர்களும் அதற்காக செயற்படுகின்ற நிறுவனங்களும், வளவாளர்களும் இனவாதத்தை வளர்க்கின்ற எல்லா நடவடிக்கைகளையும் தோற்கடிக்கக் கூடிய கோட்பாடுகளை முன்வைக்க வேண்டும்.

கட்சிகள் தங்களுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்கின்றபோது வேட்புமனுவுக்கு  மேலதிகமாக உள்ள பத்திரத்திலே எச்சந்தர்ப்பத்திலும் இன்னொரு இனத்தைத் தாக்கி தூஷி‪த்து,  இனவாதத்தைத் தூண்டமாட்டோம் என்று கைச்சாத்திட்டு பிரகடனப்படுத்த வேண்டும்.

ஒரு இனத்தைத் தாழ்த்தி மற்றொரு இனத்தை உயர்த்தி புகழாரம் சூட்டுகின்ற இழிந்த அரசியலைச் செய்ய மாட்டோம் என்பதை அரசியல்வாதிகள் பிரகடனப்படுத்துகின்ற அதேவேளை மற்ற இனங்களை இழித்துரைக்கின்ற இத்தகைய இழிகுண அரசியல்வாதிகளுக்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்பதைப் பொதுமக்களும் சுய சத்திய உறுதியுரை எடுத்துக் கொள்ள வேண்டும்

அப்பொழுதுதான் இலங்கை வாழ் அனைத்து சமூகங்களும் ஒன்றுக்குள் ஒன்று கைகோர்த்தவர்களாக அமைதியையம் அபிவிருத்தியையும் நோக்கிப் பயணிக்க முடியும்.

இதனால் மாத்திரமே ஜனநாயகம் தழைத்தோங்கும்.”


SHARE

Author: verified_user

0 Comments: