12 Nov 2018

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் சூறாவளியாக மாற்றம் பெறுகிறது

SHARE
மத்திய வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்க நிலை தற்போது சூறாவளிக் காற்றாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆழமான தாழமுக்கம் தற்போது “GAJA”  என்ற ஒரு சூறாவளியாக வலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 110 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 13.4N, கிழக்கு நெடுங்கோடு 89.3E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் இருக்கும் மீனவர்களும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

பொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வடக்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நாட்டுக்கு தென்மேற்காகவும் கிழக்காகவும் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: