3 Nov 2018

வியாளேந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

SHARE
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் எம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.கடந்த சில தினங்களாக வெளிநாடுகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டு நேற்று அதிகாலை தாயகம் திரும்பும் வரை, கட்சியின் தலைமையுடன் தொடர்புகளை கொண்டிருந்த ச.வியாளேந்திரன், நாடு திரும்பியதும் மேற்கொண்டுவரும் அரசியல் நடவடிக்கைகள் எம்மால் புரிந்துகொள்ள முடியாதவையாகவுள்ளன. நேற்று கட்சியின் சார்பில் அவருடன் தொடர்புகொள்ள தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள் எவையும் பயனளித்திருக்கவில்லை.
நேற்று நடந்த விடயங்கள் யாவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அதன் தொடராகவே நடந்தேறியவை என்பதை எம்மால் நம்பமுடியாமல் உள்ளது. அண்மைய நாட்களில் அவரின் செவ்விகள், கலந்துரையாடல்களை அவதானித்தோருக்கும் அவரது நேற்றைய தீர்மானம் மிகுந்த அதிர்ச்சியையே கொடுத்திருக்கும்.
வியாளேந்திரன் அவர்கள் எமது கட்சியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட போதிலும்கூட, அவரது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் எவற்றிலும் கட்சி இற்றைவரையிலும் தலையீடுகளை மேற்கொண்டிருந்ததில்லை. மாறாக அவரை உற்சாகப்படுத்தியும் பூரண சுதந்திரம் வழங்கியுமே வந்திருக்கின்றது.
எமது கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் வியாளேந்திரன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கைக்கு இழைத்த துரோகமாகவே அவரது இன்றைய நடவடிக்கைகளை நாம் காண்கின்றோம்.
கட்சியின் கட்டுக்கோப்பையும் தீர்மானத்தையும் மீறியதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு முரணான வகையில் செயற்பட்டிருக்கும் பா.உ ச.வியாளேந்திரன்மீது விரைவில் கட்சியின் மத்தியகுழுவினூடாக ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து அத்தீர்மானத்தை தமிழரசுக் கட்சியின் மேலதிக நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கவுள்ளோம்.
மேலும், எவரும் எதிர்பார்த்திராத வகையில் அமைந்த அவரது செயற்பாடு, கட்சியின் அங்கத்தவர்களும் அவரைத் தேர்ந்தெடுத்த மக்களும், அவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையின்மீது பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றோம். என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (IBC)
SHARE

Author: verified_user

0 Comments: