20 Nov 2018

முதலாளிமார் சம்மேளனம் சர்வதேச தொழிலாளர் சட்டங்களை மீறுகின்றது. நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் நந்தகுமார் காட்டம்

SHARE
முதலாளிமார் சம்மேளனம் சர்வதேச தொழிலாளர் சட்டங்களை மீறுவதால் தோட்டத் தொழிலாளர்கள்  தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதாக திருகோணமலை நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சிவசுப்பிரமணியம்  நந்தகுமார் காட்டமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.
மலையகத் தோட்டத் தொழிலாள மக்களின் தீர்வு காணப்படாத சம்பளப் பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை 20.11.2018 அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்காது முதலாளிமார் சம்மேளனம் இழுத்தடித்து வருவது மனித உரிமை தொடர்பான சர்வதேச வெளியீட்டின் 23ம் பிரிவின்படி தொழில் புரிவதற்கான தொழிலாளர் சட்டங்களை மீறுகின்ற நடவடிக்கையாகும்.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெறுவதற்கு மலையக தோட்ட தொழிலாளர் சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன.

தமது நியாயமான கோரிக்கைக்காக தோட்டத் தொழிலாளர்களும், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இலங்கையிலுள்ள பல்வேறு அமைப்புக்களும், பொதுமக்களும் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுத்த போதும் அவர்களது கோரிக்கை உரிய தரப்பினரால் உரிய முறையில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மனித உரிமை தொடர்பான சர்வதேச வெளியீட்டின் 23ம் பிரிவின்படி தொழில் புரிவதற்கு தொழிலாளர் சட்டங்களை முறையாக இலங்கையில் பின்பற்றப்படாமையினால் உழைப்புக்குரிய வேதனம் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.

மனித உரிமை தொடர்பான சர்வதேச வெளியீட்டின் 23ம் பிரிவினை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை அரசின் ஆட்புலத்திற்குள் உள்ள முதலாளிமார் சம்மேளனம் இச்சட்டங்களை நிராகரித்து வருவது கவலைக்குரியது.

இவ் விடயத்தில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILOதலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என நந்தகுமார் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: