25 Oct 2018

இல்லாமற்போகச் செய்யப்பட்ட நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதையே நாம் முதன்மைப்படுத்திச் செய்ய வேண்டும் அலிஸாஹிர் மௌலானா

SHARE
இல்லாமற்போகச் செய்யப்பட்ட நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதையே நாம் முதன்மைப்படுத்திச் செய்ய வேண்டும்
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
நாட்டில் இனங்களுக்கிடையில் தொன்றுதொட்டு இருந்து வந்த நல்லிணக்கமும் சமாதான சௌஜன்ய வாழ்வும் சில சக்திகளால் தீய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக  இல்லாமற் செய்யப்பட்டது. அதனை மீளக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் முன்னுரிமமைப்படுத்தப்பட்ட கடமையாக இருக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் செயற்பாடுகள் (Batticaloa District Inter Religious Committee பற்றிய அமர்வு வியாழக்கிழமை 25.10.2018 மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த மதப் பிரமுகர்கள் அனைத்து சமூக மாணவர்கன் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர்;, 
எமது நாடு கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தேசிய ரீதியான முரண்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்திருக்கின்றது.
யுத்தத்திற்கு முன்னரான காலங்களில் நாட்டு மக்களிடையே இருந்து வந்த சமாதான சௌஜன்ய சகவாழ்வு மீண்டும் நிலைபெற வேண்டும் என்பதே சமாதான ஆர்வலர்களின் ஆதங்கமாக இருந்து கொண்டிருக்கின்றது.
அதற்காகவே, தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க வேண்டும் என்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் அதற்கென ஒரு அமைச்சையும் உருவாக்கி உள்ளது.
எனவே, பொறுப்பு வாய்ந்த இந்த அமைச்சினூடாக பாடசாலை மாணவர் தொடக்கம் சமூக ஆர்வலர்கள் வரையில் பல்வேறு செயற்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.

பகைமையிலிருந்து மீண்டெழுவதற்கான உபாயங்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதுவல்லாமல் நம்மிடையே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பகைமை, வெறுப்பு போன்ற உணர்வுகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
எதிர்காலத் தலைவர்களான மாணவர் சமுதாயத்தின் மத்தியிலே சமாதானத்திற்காக கட்டியெழுப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும் சமாதானத் தூதுவர்களாக மாறவேண்டும்.

நமது நாட்டில் பேசப்படும் சிங்களம் மற்றும்; தமிழ் ஆகிய மொழிகளையும் பரஸ்பரம் கற்றுக் கொண்டு இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் நாம் கற்றுக் கொண்டு புரிந்துணர்வுக்காகப் பாடுபட வேண்டும்.

யுத்த அழிவுகளின் பங்காளிகளாக ஒருபோதும் நாம் இருக்க முடியாது என்பதை நாம் அனைவரும் இன மத மொழி பேதங்களைக் கடந்து சத்தியவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். அழிவுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு அமைதியையும் அபிவிருத்தியையும் நோக்கித் திரும்ப வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் சமாதானத்திற்கும் சமூகக் கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர் (Celina Cramer – Program Officer for Peacebuilding and Community dialog) தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ் ஆகியோரும்  வளவாளராகக் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: