11 Oct 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகச் செய்கைக்காக 120 கோடி ரூபாய் பெறுமதியான மானிய உரம் விநியோகம் தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுன்

SHARE
தேசிய உரச் செயலகத்தினால் இம்முறை மட்டக்களப்பு மாவட்ட பெரும்போகச் நெற்செய்கைக்காக 120 கோடி ரூபாய் பெறுமதியான மானிய உர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட விசாயிகளுக்கான மானிய உர விநியோகம் சம்பந்தமாக வியாழக்கிழமை 11.10.2018 கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

இம்முறை மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கான மானிய உர விநியோகம் உரிய காலத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு விநியோகம் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 இறுதி மற்றும் 2019இன் ஆரம்பம் ஆகிய காலங்களை உள்ளடக்கிய பெரும்போகத்தில் 61 ஆயிரத்து 857 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இச்செய்கைக்கென விவசாயிகளிடமிருந்து மானிய உர விநியோகத்துக்காக கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் மொத்தம் 17 ஆயிரத்து 234 மெற்றிக் தொன் யூரியா, ரீஎஸ்பி, எம்ஓபி ஆகிய உரங்கள் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

மாவட்டத்திலுள்ள 16 கமநல கேந்திர நிலையங்களில் விவசாயிகள் தமக்கான மானிய உரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அரசாங்கம் தற்போது 50 கிலோகிராம் கொண்ட உரப்பையை 500 ரூபாவுக்கு உர மானியமாக வழங்குகின்றது.

அதேவேளை 5 ஏக்கருக்கு மேல் நெற்செய்கையில் ஈடுபடும்  விவசாயிகள் தமக்குத் தேவையான 50 கிலோகிராம் கொண்ட உரப்பையை சந்தையில்  1500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்தற்காக அரசு சலுகை அளித்துள்ளது.

விவசாய அமைச்சின் தேசிய உரச் செயலகத்தினால் வழங்கப்படும் மொத்தம் 120 கோடி ரூபாய் பெறுமதியான மானிய உர விநியோகத்தில் விவசாயிகள் செலுத்தும் பணம் 17 கோடி ரூபாவாகும். மீதமுள்ள 103 கோடி ரூபாவை அரசு மானியமாக விவசாயிகளுக்கு வழங்குகின்றது.



SHARE

Author: verified_user

0 Comments: