13 Jun 2018

மட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக  கடமையாற்றிய இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கௌரவ முதலமைச்சர் செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் 1994 இல் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட இவர் கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு சமுர்த்தி அமைச்சு ஆகியவற்றில் கடமையாற்றி 2006 இல்  இலங்கை திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்தைப் பெற்றுக் கொண்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக பொதுச்சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டார். திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்ததில் 12 வருட சேவைக்காலத்தை பூர்த்திசெய்த இவர் திட்டமிடல் சேவை விசேட தரத்திற்கான நேர்முகப் பரீட்சையை 2012 இல் பூர்த்திசெய்து விசேட தரத்தை எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் சிறப்புப்பட்டம் பெற்று  3 வருடங்கள் உதவி விரிவுரையாளராக (பொருளியல்) யாழ். பல்கலைக்கழகத்தில் கடமையாற்றியதுடன் தனது பட்டபின் படிப்பு டிப்ளோமாவை(அபிவிருத்தி திட்டமிடல்) கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டதுடன் தனது முதுமாணிப் பட்டபடிப்பையும் (பொருளியல்) பூர்த்தி செய்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக வர்த்தகபீட முகாமைத்துவ சபையில் அங்கத்தவராகவும், கலை கலாச்சார பீட கணக்காய்வு குழுவின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார். மேலும் கொரியா, தாய்லாந்து, இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன் றநாடுகட்கு சென்று பிரதேச திட்டமிடல் தொடர்பான விசேட பயிற்சிகளை பெற்றுவந்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை தயாரித்தல், செயற்படுத்தல் மற்றும் கண்காணித்தல், அறிக்கையிடல் போன்ற விடயங்களில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரச அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்களுடன் இணைத்து செயற்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட வறுமை 2012 இல் 20.3 வீதத்தலிருந்து 2017 இல் 11.3 வீதமாக குறைக்க முடிந்தமை பாராட்டதக்கதாகும்.

எனினும் அண்மைக் காலத்தில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரின் நடவடிக்கைகள் மூலம் அவர் மிகவும் மனவேதனைக்குட்பட்டதாகவும் இதன் காரணமாகவே அவர் இடமாற்றம் பெற்றுசெல்வதாகவும் அறிய முடிகின்றது. 
அவரால் தனது இடமாற்றத்தையொட்டி தயாரிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தியை நோக்கி ஓர் மீள்பார்வை-  2012-2017 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: