8 Jun 2018

தமிழ் சமூக மாணவிகள் இருவரின் மூன்றாண்டுகளுக்கான கல்விக்கான செலவை தனது சொந்த நிதியில் இருந்து வழங்குவதாக ஷிப்லி பாறூக் உறுதி

SHARE
சமூக விஞ்ஞான போட்டிகளில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மட்டக்களப்பு காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தைச் சேர்ந்த  தமிழ் சமூக மாணவிகள் இருவரின் மூன்றாண்டுகளுக்கான கல்விச் செலவை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைப்பதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் காத்தான்குடி நகர சபையின் தற்போதைய உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் உறுதியளித்தார்.
சமூக, விஞ்ஞான போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த மாணவிகள் மற்றும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வைபவம் காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் புதன்கிழமை 06.06.2018 நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எஸ். சுந்தரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போதே இந்த உறுதிமொளி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஷிப்லி பாறூக் அப்பாடசாலை சார்பாக சமூக விஞ்ஞான போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த தரம் 9இல் கல்வி பயிலும் இரு மாணவிகளுக்கும் அவர்களின் க.பொ.த. சாதாரண தரம் வரையிலான கல்விச் செலவினை தாம் தனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதாகத் தெரிவித்தார்.

அதிகளவான வளங்களைக்கொண்ட பாடசாலைகளுக்கு மத்தியில் இத்தகைய பின்தங்கிய பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவிகள் தேசிய ரீதியில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளமைமையானது மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும்.

இருப்பினும் தமது குடும்ப பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தகைய அதிகமான மாணவர்கள் தமது கல்வியினை உரியமுறையில் தொடரமுடியாமல் போகின்ற சந்தர்ப்பங்களை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
எனவே இத்தகைய மாணவர்களை ஊக்கப்படுத்தி, சரியான வழிகாட்டுதல்களையும் எங்களால் முடியுமான உதவிகளையும் பெற்றுக்கொடுக்கின்றபோது எதிர்காலத்தில் அவர்களை சிறந்த கல்வியியலாளர்களாக உருவாக்க முடியும் என்பதில் எத்தகைய சந்தேகங்களும் கிடையாது.

ஆகவேதான் நாங்கள் இத்தகைய பின்தங்கிய, வளப்பற்றாக்குறைகள் மிக்க பிரதேச பாடசாலைகளை மையப்படுத்தி அதிகளவான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதோடு எதிர்காலத்திலும் எங்களால் முடியுமான அனைத்துவிதமான உதவிகளையும் பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.

மேலும் தேசிய மட்டத்தில் இத்தகைய சாதனைகளை நிகழ்த்தி இந்த பிரதேசத்திற்கு மாத்திரமன்றி எமது முழு மாவட்டத்திற்கும் பெருமைகளை பெற்றுக்கொடுத்த இந்த மாணவிகளையும் அவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களையும் கௌரவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதோடு அவர்கள் மேலும் பல்வேறு சாதனைகளைப்புரிய வாழ்த்துகின்றேன் எனவும் தெரிவித்தார்.

‪இந்நிகழ்வில் மண்முனை மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் விஷ்ணுகாந்தன், ஓய்வு பெற்ற அதிபர் அகிலேஸ்வரன், ஆசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: