31 May 2018

அரசியல் மயப்படுத்தப்பட்ட கல்விச் சேவையால் குழப்பமும் பின்னடைவும் ஆட்சேபிக்கிறது கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம்

SHARE
முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டதாக  கல்விச் சேவை மாறிவருவது எதிர்கால சந்ததிக்கான இலவசக் கல்வியின் நலன்களை முற்றாகப் பாதிப்பதோடு நாட்டை இருண்ட தேசமாக மாற்றும் என தாம் அச்சமடைவதாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா இது விடயமாக புதன்கிழமை 30.05.2018 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்பார்க்க முடியாதளவுக்கு கல்விப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தேசியக் கல்வி அடைவு மட்டத்தில் 8வது மற்றும் 9வது மாகாணம் என்ற இடத்தை வடக்கு கிழக்கு மாகாணங்கள் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

ஒரு காலத்தில் கல்விப் புலமையில் கோலோச்சிய இந்த மாகாணங்களுக்கு தற்போது ஏற்பட்டிரக்கின்ற துரதிருஷ்ட நிலைமைக்கு சமகால அரசியல்வாதிகளே பொறுப்புக் கூற வேண்டும்.

நாட்டில் மொத்தம் 352 தேசியப் பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 260 பாடசாலைகளில் பதில் அதிபர்களே பொறுப்பு அதிபர்களாகக் கடமைபுரிகின்றார்கள்.

கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம், மாகாணக் கல்வித் திணைக்களம் என்பன முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதே பாடசாலைகளில் இவ்வாறு நிர்வாகச் சீர்கேடு இடம்பெறுவதற்கான பிரதான காரணமாகும்.

அதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொருத்தமில்லாத காலப்பகுதியில் வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் இடம்பெறுகிறது.

இதற்கும் அரசியல் செல்வாக்குளே காரணமாய் அமைந்து விட்டிருக்கின்றது.
ஆசிரியர் இடமாற்றத்திற்கான தேசிய கொள்கை என்று ஒன்றுள்ளது.

அந்தக் கொள்கையைப் பிற்பற்றியோ அல்லது மாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு கொள்கை வகுப்பின் அடிப்படையிலோ ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் இடம்பெற வேண்டும்.

ஆனால் இந்த இரண்டு கொள்கைகளும் இல்லாது கிழக்கு மாகாணத்தில் வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் வருடாவருடம் இடம்பெற்று வருவது ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி அலுவலர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

வருடத்தின் நடுப்பகுதியில் வருடாந்த இடமாற்றம் எங்குமே இடம்பெறுவதில்லை.
இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திற்கான இடமாற்றம் தற்சமயம் வருடத்தின் அரையாண்டு கடந்து விட்டபோதிலும் இன்னமும் இடம்பெறவில்லை.

தேசிய இடமாற்றக் கொள்கையின்படி இடமாற்றத்தை விரும்பும் ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றத்தை வேண்டி வலயக் கல்விப் பணிப்பாளர்களுடாகச் நடப்பு வருடத்தின் மே, ஜுன் மாதங்களில் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பின்னர் அந்த விண்ணப்பங்கள் கல்வி அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் இடமாற்றப்பட்டியல் ஓகஸ்ட் மாதத்தில் வலயக் கல்விக் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

அதில் ஏதாவது ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றினையும் உள்வாங்கி இறுதி இடமாற்றப் பட்டியல் நொவெம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு அந்த ஆண்டிறுதி விடுமுறைக்கு முன் வழங்கப்படல் வேண்டும்.

இது மாற்றலாகிச் செல்லும் பாடசாலைகளில் புதிய பாட ஒழுங்ககுகளை ஆசிரியர்கள், அதிபர்கள் மேற்கொள்வதற்கும், ஆசிரியர்கள் தமக்கான புதிய பாடசாலையைத் தெரிந்து அங்கு பணியாற்றச் செல்வதற்கும் நிருவாக அலுவலர்கள் தமது கடமைகளை சிறப்புற மேற்கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.

ஆனால், இந்த வித நிருவாக ஒழுங்குகள் எதுவுமே இல்லாமல் முறையற்ற விதத்தில் ஆண்டின் நடுப்பகுதியில் வழங்கப்படும் ஆசிரியர் இடமாற்றங்களால் மாணவர்களின் கல்வி உட்பட நிருவாகச் செயற்பாடுகள் அத்தனையும் குழப்பிப் போய் விடுகின்றன.

ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்த நிலையிலேயே ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை போன்ற முக்கியமான கல்வி நிகழ்வுகள் இடமபெறுகின்றன.

இவை ஒரு புறமிருக்க முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஆசிரியர் இடமாற்றங்களால் ஆசிரியர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டியுமுள்ளது.

ஆகவே இத்தகைய குழப்பகரமான நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக அரசியல் கலப்படமற்ற முறையான ஆசிரியர் இடமாற்றக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இல்லையேல் இலங்கையின் கல்வி நிலை அதலபாதாளத்தை நோக்கிச் செல்லும் எனும் எச்சரிக்கை கலந்த அச்சத்தை வெளியிடவேண்டியுள்ளது.
  

SHARE

Author: verified_user

0 Comments: