3 Jan 2017

விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு கடலில் மூழ்கி இளைஞன் பலி

SHARE
புதுவருடக் கொண்டாட்டத்தை நண்பர்களுடன் கடற் கரையில் கழித்த இளைஞன் கடல் அலையில் அள்ளுண்டு மரணித்து விட்ட சம்பவம் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில்
ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு ஐந்தாம் வட்டாரம், தேத்தாவடி வீதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் ஜனேஸ்குமார் (வயது 23) என்ற இளைஞன் பாரிய கடல் அலையில் சிக்குண்டு மரணித்தவராகும்.

கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கடல் அலையால் கரை சேர்க்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, தனது நண்பர்களுடன் இந்த இளைஞன் உல்லாசமாக புதுவருடப் பொழுதைக் கழிப்பதற்காக கடற் கரைக்குச் சென்றுள்ளான்.

அப்போது கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென பேரலை ஒன்று இந்த இளைஞனை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
கடலில் மூழ்கிய இளைஞனை சற்று நேரத்தில் மீண்டும் மற்றொரு கடலலை கரையில் ஒதுக்கியுள்ளது.

நண்பர்கள் உடனடியாக இளைஞனை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவனது உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம்பற்றி காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, புதுவருடத் தினத்தன்று மட்டக்களப்பு கல்முனை வீதி, தாழங்குடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமுற்றிருந்த வயோதிபர் சிகிச்சை பயனின்றி செவ்வாய்க்கிழமை மரணித்து விட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் மரணித்தவர் மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு பிரதான வீதியைச் சேர்ந்த சின்னையா கந்தசாமி (வயது 86) என்பராகும்.
சடலம் நல்லடக்கத்திற்காக அவரது பிள்ளைகளிடம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பயணித்துள்ளனர். அவர்களில் மூவர் படுகாயமடைந்த நிலையில் முதியவர் மரணித்துள்ளார்.
இந்த வீதி விபத்தில் படுகாயமுற்ற மேலும் இரு சிறுவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேரூந்தின் மீது, கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற கார்  வேகக் கட்டுப்பாட்டை இழந்து சென்று தடுமாறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.


SHARE

Author: verified_user

0 Comments: