29 Jul 2016

இளவயதுத் திருமணம் என்பது ஒரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சிறுவர் நன்னடத்தைப் பொறுப்பதிகாரி றபாஸ்

SHARE
இளவயதுத் திருமணம் என்பது ஒரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக மட்டக்களப்பு வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தைப் பொறுப்பதிகாரி எம்.என்.எம். றபாஸ் தெரிவித்தார்.

யுத்தத்திற்குப் பின்னர் சிவில் சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் காட்சிக் கலையரங்க அமர்வு (Forum Theatre செவ்வாய்க்கிழமை (ஜுலை 26, 2016) மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் Eastern Social Development Foundation எனும் தன்னார்வ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எல். புஹாரி முஹம்மத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூகத்தின் பல்வேறு மட்டக்களிலுள்ள அதிகாரிகள், தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் என சுமார் 100 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

அங்கு சமூகத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான பிரச்சினைகள் பற்றிப் பிரஸ்தாபித்த சிறுவர் நன்னடத்தை அதிகாரி றபாஸ், கணவனை இழந்த பெண்கள் தமது வறுமை நிலை காரணமாக தனது பராமரிப்பிலுள்ள வளர்ந்த பெண் பிள்ளைகளை சிறு பராயத்திலேயே திருமணம் முடித்துக் கொடுக்கும் துரதிருஷ்ட நிலை அதிகரித்து வருகின்றது.

18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளை சட்டப்படி பதிவுத் திருமணம் செய்ய முடியாது என்பதனால், பதிவு செய்யாமலே சம்பிரதாயத் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.

எனவே, பதிவு செய்யாமல் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகின்ற பொழுது பல்வேறு உடல் உள ஆரோக்கியப் பிரச்சினைகள் எழுகின்றன.

இதனால், இளவதிலேயே வாழ்க்கையைப் பிரிந்து விடுகின்றரர்கள். சிறுமியாக இருக்கின்றபோதே கைக் குழந்தையுடன் விதவையாகி விடுகின்ற துர்ப்பாக்கியத்தை இந்த சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும்.

மேலும், கணவன் இல்லாமல் குழந்தைக்குப் பிறப்புப் பதிவு வைக்க முடியாது. அது சிரமமான காரியம். எனவே, குழந்தை பிறப்புப் பதிவில்லாமலேயே வாழ வேண்டியேற்படுகின்றது.

மேலும் கைவிட்டுச் சென்ற கணவனிடமிருந்து தாய்க்கும் பிள்ளைக்கும் சட்டப்படியான தாபரிப்புப் பணத்தையோ வேறேதும் நஷ்ட ஈடுகளையோ கோர முடியாது.

சில சிறுமிகளான தாய்மார் தமது கணவனின் விவரம் என்னவென்றே தெரியாமல் தனது 2, 3 வயதான பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு பிள்ளைகளுக்கு பிறப்புப் பதிவு வைக்க அலைந்து திரிவதை நாம் காண்கின்றோம்.

இத்தகைய துர்ப்பாக்கிய நிலை வளர்வதற்கு இனிமேலும் அனுமதிக்கக் கூடாது.
16 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்து வைக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது குடும்ப வாழ்க்கையல்ல. கற்பழி;ப்பு என்றே கருதப்படும்” என்றார்
இந்நிகழ்வில் கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிஸ் உள்ளிட்ட அரச சேவையாளர்கள், சமூக மட்ட அமைப்புக்களான கிராம அபிவிருத்திச் சங்கம், பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும்  இந்த விடயத்தில் அக்கறைக்குரிய தரப்பினர் ஆகியோர் பங்குபற்றினர்.

SHARE

Author: verified_user

0 Comments: